| 
15. 
 நாடக இலக்கியம் தமிழ்நாட்டில் பழங்காலத்திலிருந்தே நாடகக்கலை சிறப்புடன் 
 இருந்து வந்திருக்கிறது. நாடக அரங்குகள் இருந்துவந்தன; நடிகர் குழுக்கள் இருந்துவந்தன; 
 நாடகங்களும் இருந்தன. நாடகங்கள் ஆடலும் பாடலும் கலந்தவை ஆகையால், பாடல்கலையில் 
 வல்ல பாணர்களும், ஆடல்கலையில் வல்ல விறலியர், கூத்தர், பொருநர் ஆகியோரும் நாடகக் 
 கலை வளர்ச்சிக்கு உதவினார்கள். சங்க இலக்கியம் வளர்ந்த காலத்தில் ஆடல்பாடல் 
 கலைகள் செழிந்திருந்தபடியால், நாடகங்களும் பல இருந்திருக்க வேண்டும். அக்காலத்து 
 இலக்கியத்தின் அமைப்பையும் மரபையும் விளக்கிப் பெரிய நூல் எழுதிய தொல்காப்பியனார், 
 மெய்ப்பாடுகள் எட்டனையும் (ரசங்கள்) விளக்கிய இடத்தில், கலையரங்குகளின் மரபுகளைக் 
 குறிப்பிட்டே தொடங்குகிறார். பண்ணைத் தோன்றிய (கலையரங்குகளில் வெளிப்படும்) 
 மெய்ப்பாடுகள் என்கிறார். மெய்ப்பாட்டியல் என்ற அந்த பகுதியை முடிக்கும்போது, கண்ணாலும் 
 செவியாலும் திட்பமாக உணரவல்ல நுட்ப உணர்வு உடையவர்களே மெய்ப்பாடுகளின் இயல்பை 
 உணர முடியுமே தவிர மற்றவர்களுக்குக் காட்ட இயலாத பொருள்கள் அவை என்கிறார். அவர் 
 நாட்டியக் கலையைக் கொண்டே இலக்கியத்திற்கு உரிய மெய்ப்பாடுகளை விளக்கியுள்ளார் 
 என்பது வெளிப்படை. பழங்காலத்தில் நாட்டியக் கலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு 
 வளர்ந்தது நாடகக் கலை. ஆதலின் நாடகக் கலையைப்பற்றித் தனியே விளக்கங்கள் கூறவில்லை. 
 பழைய காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பலவகை நாட்டியங்களைப்பற்றியும் 
 கதை தழுவிவரும் கூத்துக்களைப்பற்றியும் பற்பல குறிப்புகள் உள்ளன. ஆகவே பழந் தமிழ்நாட்டில் 
 நாடகங்கள் பல இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் சங்ககாலத்துப் 
 பாட்டுகள் இப்போது நமக்குக் கிடைப்பதுபோல், அக்காலத்து நாடக நூல் ஒன்றும் கிடைக்காதது 
 வருந்தத்தக்கது. பாட்டுகளை அழியாமல் காத்துத் திரட்டித் தொகுத்துத் தந்த புலவர்கள், 
 நாடகநூல்களைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. பொதுமக்கள் அவ்வப்போது நாடகங்களைக் 
 கண்டு மகிழ்ந்து போற்றினார்களேதவிர, நாடக நூல்களைக் காத்துவரவில்லை. நாடகங்கள் சில அரசர் போற்றும் அரங்குகளுக்கு உரியவை 
 என்றும், சில பொதுமக்களின் இன்பத்துக்கு உரியவை என்றும் பாகுபாடு செய்யப்பட்டிருந்தன. 
 வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் அவை முறையே குறிக்கப்பட்டன. |