பக்கம் எண்: - 267 -

அப்பாற்பட்ட நடையையும் கருத்துகளையும் அவற்றில் அமைத்தார்கள். ஆகையால் அந்தப் பள்ளு நூல்களில் பல நடப்பியலுக்கு (realism) அப்பாற்பட்டவைகளாக உள்ளன. உணர்ச்சியால் தூண்டப்பட்டுப் படாமல், அந்தந்த ஊர்மக்களின் மகிழ்ச்சிக்காகத் தலபுராணங்கள் பல தலங்களுக்கும் பாடப்பட்டமைபோல், அந்தந்த ஊர்களைப் புகழ்வதற்காகவும், அங்கங்கே வாழ்ந்த செல்வர்களைப் புகழ்வதற்காகவும் பள்ளு நூல்களைச் சில புலவர்கள் இயற்றினார்கள். பறாளை விநாயகர் பள்ளு, கதிரைமலைப் பள்ளு, குருகூர்ப் பள்ளு முதலியன தலங்களைச் சிறப்பிப்பதற்காக எழுதப்பட்டவை. நாற்பது பள்ளு நூல்களைப்பற்றி இப்போது அறியமுடிகிறது. வேறு பல, காலத்தால் மறைந்து போயிருக்கலாம். இராம நாடகம் என்ற செய்யுள் நாடக நூல் பாடிப் புகழ்பெற்ற அருணாசலக் கவிராயரும் சீகாழி என்ற தலத்தைப்பற்றி ‘சீகாழிப்பள்ளு’ என்ற நூல் பாடினார். அந்த நூலின் பாடல்களில் இப்போது ஐந்துமட்டுமே கிடைக்கின்றன.

பிற்காலத்தில் என்னயினாப்புலவர், மேடையில் முக்கூடற்பள்ளு நடிக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் பலவற்றைச் சேர்த்து அமைத்து ‘முக்கூடற்பள்ளு நாடகம்’ என்ற பெயரால் எழுதினார். அது பல இடங்களிலும் நடிக்கப்பட்டு வந்தது. அந்த நூல் 320 செய்யுள் கொண்டது. அதில் கோமாளி (விதூஷகன்) ஒரு பாத்திரமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறான். மக்கள் கண்டு சுவைத்து மகிழ்வதற்காகக் கதைப் போக்கிலும் புதிய நிகழ்ச்சிகள் சில சேர்க்கப்பட்டன.

குறவஞ்சி

குறவஞ்சி என்பது ஒருவகையான நாடகம். குறவஞ்சி என்ற தொடர் குறவர் குலத்துப் பெண் என்று பொருள்படும். நாடகத்தில் குறப்பெண் வந்து குறி கூறுவாள்; பிறகு தன் கணவனாகிய குறவனுடன் பேசுவாள். நூலின் அமைப்பு, காதல் பற்றியது. பெருமைக்கு உரிய தலைவன் ஒருவன் தெரு வழியே பலர் சூழ உலா வருவான். அப்போது இளமையும் அழகும் நிரம்பிய தலைவி அவனைக் கண்டு காதல் கொள்வாள். காதலால் வாடுவாள் தலைவி. அவளுடைய தோழி, வாட்டத்தின் காரணம் என்ன என்று கேட்பாள். தலைவி தன் காதலனிடம் தூது சென்று தன்னைப்பற்றிச் சொல்லி வருமாறு தோழியை வேண்டுவாள். அந்நிலையில்தான் மேற்குறித்த குறப்பெண் தெரு வழியே வருவாள். அவளிடம் குறி கேட்பதற்குத் தோழி அழைப்பாள். குறப்பெண் தன் மலையின் வளமும் தொழில் வளமும் சிறப்பாக எடுத்துச் சொன்ன பிறகு, தலைவியின் கையைப் பார்த்து அவளுடைய காதல்பற்றிக் குறி சொல்வாள். காதலிக்கப்பட்ட தலைவனுடைய புகழ்பற்றியும் சொல்வாள்.