பக்கம் எண்: - 268 -

தலைவியின் எண்ணம் நிறைவேறும் என்றும், தலைவன் வந்து மணம் செய்து மகிழ்விப்பான் என்றும் குறி சொல்வாள். குறப்பெண்ணுக்குப் பரிசுகள் கொடுக்கப்படும். அந்தப் பரிசுகளோடு புதிய அணிகலன்களை அணிந்து மகிழ்வுடன் அவள் தன் மலை  நோக்கி நடப்பாள். அப்போது வழியில் பறவைகளைப் பிடித்துக்கொண்டிருந்த குறவன்  அவளைக் கண்டு, புதிய அணிகலன்கள் பற்றிக் கேட்பான். குறத்தி நடந்ததைக் கூற, நாடகம் முடியும். பலவகையான செய்யுள்களால் கதை பாடப்படும். பலவகைச் செய்யுள்களுடன் சிந்து முதலான இசைப் பாடல்கள் கலப்பதால் நாடகம் சுவை குன்றாமல் நாடகத்தின் இடையிடையே கட்டியக்காரன் என்று ஒருவன் வருவான். அவன் மேடையில் நடிக்க வரும் மாந்தர்களை இன்னார் இன்னார் என்று முன்னதாகவே அவையோர்க்கு அறிமுகப்படுத்துவான்; அவர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்வான். நாடகம் முழுதும் செய்யுளாகவே இருக்கும்.

குறவஞ்சி நூல்களுள் இன்றும் பாராட்டுக்கு உரியதாக விளங்கிவருவது திருக்குற்றாலக் குறவஞ்சி, குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை குறம் என்ற நூலின் கதையும் இவ்வகையானதே; ஆயின் அது நாடகமாக அமையவில்லை. சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய சரபேந்திரபூபாலக் குறவஞ்சி நாடகப்போக்கில் அமைந்தது. கும்பேசர் குறவஞ்சி நாடகம், அர்த்தநாரீசுவரக் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி முதலிய வேறு பல நூல்களும் உள்ளன.

பெயர்பெற்ற குறவஞ்சியாகிய திருக்குற்றாலக் குறவஞ்சி இன்றும் நாட்டிய நாடகமாக மேடையில் நடிக்கப்பட்டு வருகிறது: சுவைமிக்க இலக்கியமாகவும் படித்துப் போற்றப்பட்டு வருகிறது. அதன் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள சிவபெருமானைப் போற்றி, தெய்வக் காதல்பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பட்ட நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி. அந்த ஊரைப்பற்றித் தலபுராணமும், மாலை, சிலேடை, வெண்பா, யமக அந்தாதி, உலா, ஊடல், பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களும் அவர் இயற்றியுள்ளார். இருப்பினும் இன்று பலரும் விரும்பிப் படிப்பது அவருடைய குறவஞ்சி ஒன்றே. அதன் பாடல்கள் இசையோடு பாடி மகிழ்வதற்கு ஏற்றவை; நாடகச் சுவை நிரம்பியவை. குறத்தி தன்னுடைய மலையின் வளத்தைப் புகழ்ந்து கூறுவதாக உள்ள பாடலைக் காண்போம்;

         வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்ம்
         மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்