கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
கவனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவி திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்
கூனல்இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திருகூட மலைஎங்கள் மலையே.
இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த விசுவாநாத சாஸ்திரியார்
சென்ற நூற்றாண்டில் இரண்டு குறவஞ்சி நூல்கள் இயற்றினார். வண்ணக்குறவஞ்சி, நகுலமலைக்
குறவஞ்சி என்பவை அவை. அவர் சிலேடைச் செய்யுள்களில் வல்லவர்.
நொண்டி
நாடகம்
நகைச்சுவைக்கும் எள்ளல் சுவைக்கும் இடம் தரும்
நாடகவகை ஒன்று பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வளர்ந்தது. மக்கள் தெய்வத்தை
எள்ளி நகையாடத் தயங்கினார்கள். செல்வர்களை எள்ளி நகையாடவோ முடியாது. ஏழை எளியவர்களான
குற்றவாளிகளைப் பற்றிப் பாடி நகையாட முடியும். ஒருவர் தீய வழிகளில் நடந்து ஒழுக்கம்
கெட்டுப் பரத்தையரிடம் உறவுகொண்டு இறுதியில் அல்லல்பட்டுக் கால் இழந்து துன்புறுவதாகக்
கற்பனை செய்து பாடும் வழக்கம் தோன்றியது. சீதக்காதி என்ற முஸ்லீம் வள்ளலின்
காலத்தில் அவ்வாறு துன்புற்ற கொள்ளைக்காரன் ஒருவன் கடைசியில் மனம் மாறி மெக்காவுக்குச்
சென்று திருந்திக் காலும் பெற்றுத் திரும்பியதாகச் சிந்து என்னும் யாப்பு வகையில்
பாடினார் ஒருவர். அது சீதக்காதி நொண்டி நாடகம் எனப்பட்டது. இப்படிப்பட்ட நொண்டி
நாடகங்களில் பாடப்பட்ட சிந்து என்னும் யாப்புக்கு நொண்டிச் சிந்து என்ற பெயர்
ஏற்பட்டது. அக்காலத்தில் நொண்டி நாடகங்கள் பல இயற்றப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில்
மாரிமுத்துப் புலவர் என்பவர் திருக்கச்சூர் நொண்டி நாடகம் இயற்றிப் புகழ் பெற்றார்.
ஐயனார் நொண்டி நாடகம் என்பதும் பலர் போற்றிய நாடகமாக விளங்கியது.
இராம
நாடகம்
அருணாசலக் கவிராயர் (கி. பி. 1712 - 1779) சீகாழி என்ற
தலத்தின்மேல் ஒரு புராணமும் ஒரு கோவையும் பாடியுள்ளார். அவருக்கு இராமாயணக் கதையில்
இருந்த ஈடுபாடு மிகுதி. அனுமார்மேல் ஒரு பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். அசோமுகியின்
கதையை அமைத்து ஒரு நாடகம் இயற்றினார். அவருக்கு அழியாப் புகழைத் தேடித் தந்த நூல்,
இராமாயணத்தை நல்ல கீர்த்தனைப் பாடல்களாகப் பாடி இயற்றித் தந்துள்ள இராம நாடகம்
ஆகும். இராமநாடகக் கீர்த்தனை என்றும் அது கூறப்படும்.
|