பக்கம் எண்: - 270 -

முழுதும் பாடல்களாகவே அந்த நாடகம் அமைந்துள்ளது. எல்லாம் இசையோடு பாடப்படும் பாடல்கள். இன்றும் அவற்றுள் பல பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. கொச்சைத் தமிழும் கலந்து, நாடக அரங்கில் கேட்கும் மக்கள் விரும்பிச் சுவைக்கக்கூடிய மெட்டு அமைத்து, கற்பனை நயத்தோடு பாடியுள்ளார்.

மறைந்த நாடகங்கள்

பதினெட்டாம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கிய மற்றொரு நாடகம் அநீதி நாடகம் என்பது; மாரிமுத்துப்பிள்ளை இயற்றியது. கருநாடக நவாபுகளின் காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் கிராமங்களில் செய்த அட்டூழியங்களும் அக்காலத்துக் கவர்னராக இருந்த கான் சாயபு என்பரின் நேர்மையும் அந்த நாடகத்தில் விளக்கப்பட்டன.

சென்ற நூற்றாண்டில் நாடக நூல்கள் பல எழுதிப் புகழ் பெற்றவர் காசி விசுவநாத முதலியார். டம்பாச்சாரி நாடகம், தாசில்தார் நாடகம், பிரம்ம சமாஜ நாடகம் (1871) என்பவை அவற்றுள் சிறப்புடையவை. அவை பல நாடக நூல்கள் எழுதப்படுவதற்கு வழிகாட்டியாக அமைந்த அப்பாவுபிள்ளை இயற்றிய அரிச்சந்திர விலாசமும் அக்காலத்தில் புகழுடன் விளங்கியது.

இராமச்சந்திரக் கவிராயர் என்பவர், சகுந்தலை விலாசம், தாருக விலாசம், பாரத விலாசம் முதலிய புராணக் கதைகளை ஒட்டிய நாடகங்களை இயற்றினார். அவர் சித்திரக் கவிகள் பல எழுதினார். அவருடைய எழுத்துகள் நகைச்சுவை நிரம்பியவை. பாசுராமக் கவிராயர் என்பவர் அறுபத்துமூன்று சிவனடியாருள் ஒருவடைய வாழ்க்கையை அமைத்துச் ‘சிறுத்தொண்டர் விலாசம்’ இயற்றினார். இவற்றால் அக்காலத்துக் கவிஞர்கள் சிலர் நாடக் கலையில் கொண்டிருந்த ஈடுபாடு விளங்குகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகங்கள் பல ஏட்டுப் பிரதிகளாகவே இருந்து மறைந்தன; சில இன்னும் அந்நிலையிலேயே உள்ளன. அச்சாகி வெளிவந்த நாடகங்கள் ஒரு நூறு இருந்தன. அவற்றுள்ளும் பல மறைந்து போயின.

சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட நாடகங்களுள் பெரும் பாலானவை புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றுள் பல இன்னும் ஒலைச்சுவடிகளாக உள்ளன. இரணிய சம்மார நாடகம், உத்தர ராமாயண நாடகம், மார்க்கண்டேயர் நாடகம் முதலிய நாடகங்களும், பெரிய புராணத்துச் சிவனடியார்களின் கதைகளை ஒட்டிய நாடகங்களும் அக்காலத்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தன.

பழைய நாடகங்களின் பாட்டுகளே பெரும்பாலும் இருக்கும்; இடையே