உரைநடைப் பேச்சும் காணப்படும். முதலில் தெய்வ வணக்கம்
இரண்டடிப் பாட்டுகளால் அமைந்திருக்கும். அதன்பின் கட்டியக்காரன் வந்து கூறும் கூற்று
அமையும். அவன் வடமொழி நாடகங்களில் வரும் சூத்திரதாரன் போன்றவன் என்று கூற முடியாது.
சூத்திரதாரன் நாடகத் தொடக்கத்தில்மட்டும் வருவான். கட்டியக்காரனோ, நாடகத்தில்
எல்லா இடங்களிலும் வருவான். காட்சி மாறும்போதெல்லாம் அவன் வந்து பேசுவான். அக்காலத்தில்
நாடகத்தை அங்கம் காட்சி என்று பிரிக்கும் பிரிவுகள் இல்லை. ஆகையால் காட்சி மாறுவதை
உணர்த்துவதற்குக் கட்டியக்காரன் மேடையில் தோன்றுவதையும் பேசுவதையும் பயன்படுத்தினார்கள்.
அவன், நாடகத்தில் வருகின்றவர் இன்னின்னார் என்று அவ்வப்போது அறிமுகப்படுத்துவான்;
நாடகத்தில் தோன்றும் அரசர் முதலானவர்களின் சிறப்புகளை எடுத்துச் சொல்வான். “அரிச்சந்திர
மகாராசன் கொலுவீற்றிருக்க வருகிற விதம் காண்க” “கோவலன் கண்ணகியிடம் திரும்பி
வருகிற விதம் காண்க” என்பனபோல அவனுடைய அறிமுகம் அமையும். இறுதியில் மங்களப்
பாட்டு இருக்கும். தரு என்ற பெயரோடு பாட்டு அமையும். வடமொழி நாடகங்களின் இறுதியில்
வரும் பரதவாக்கியம் தமிழ் நாடகங்களில் இல்லை.
தெருக்கூத்து
நாடகங்களில் ஒரு வகையான தெருக்கூத்து என்பது சென்ற
சில நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. அதன் பெயரே அறிவிக்குமாறு, அது நாடக அரங்கு இல்லாமல்
தெருக்களில் வெட்டவெளியில் நடிக்கப்பட்டு வந்த நாடகம் ஆகும். பெரும்பாலும் கிராமப்புறங்களில்
உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக நடிக்கப்படுவது; நடிகர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள்.
செய்யுளும் உரைநடையுமாக நாடகம் அமைந்திருக்கும். இரவில் உணவை முடித்த பிறகு ஒன்பது
மணிக்குமேல் தொடங்கி விடியற்காலம் வரையில் தெருக்கூத்து நடைபெறுவது உண்டு. இதிலும்
கட்டியக்காரன் வருவான்; நாடகப் பாத்திரங்களை அறிமுகப்படுத்துவான். அவனுடைய பேச்சுகளும்
பாட்டுகளும் மக்களுக்கு நாடகத்தை நன்றாக விளக்கும். நடிகர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே
இருப்பார்கள். பெண்வேடமும் போட்டு நடிப்பார்கள். எல்லா வகையான நாடகங்களையும்
தெருக்கூத்துக்களில் நடித்துக்காட்டுவார்கள். சிறிது உயரமான மேடை ஒன்று அமைக்கப்படும்.
உயரம் இல்லாத இடங்களிலும் சின்ன அரங்கு இருக்கும். அதில் நாடக மாந்தர் வருவதற்குமுன்
வெள்ளைத்துணி ஒன்று திரைபோல் பிடிக்கப்பட்டு அவர்கள் அதன்பின் வந்து நின்றபின்,
துணி நீக்கப்படும். நடிப்பவர்கள் பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி ஆடுவார்கள். பின்பாட்டுக்காரர்
சிலர் இருந்து,
|