பக்கம் எண்: - 277 -

உயிரோட்டம் குறைந்தனவாக நின்றன. ஆயினும் நாடகத்துறையில் அவர்க்கு இருந்த ஆர்வமும் தமிழின் வளர்ச்சியில் அவர் கொண்டிருந்த ஈடுபாடும் போற்றத்தக்கவை.

மறைமலையடிகள் வடமொழி சாகுந்தல நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதுவும் இலக்கியமாக நின்றது; நடிப்பதற்கு உரியதாக அமையவில்லை. கம்பர் என்னும் பெரும்புலவரின் மகனான அம்பிகாபதியின் வாழ்க்கையை ஒரு நாடகமாக அவர் இயற்றினார்.

ஆங்கிலம் பிரெஞ்சு முதலான ஐரோப்பிய மொழிகளில் உள்ள நாடகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றுள் சில நடித்துக் காட்டப்பட்டன. அவற்றை நேரே மொழி பெயர்க்காமல் அந்தக் கதைகளைத் தழுவியும் மாற்றியும் நாடகங்கள் எழுதும் முயற்சியும் வளர்ந்தது. அவைகள் நடிக்கப்படும் அளவில் நின்றன; படிக்கப்படும் இலக்கியங்களாகப் பயன்படவில்லை.

ஒரு சிக்கல்

நடிப்பதற்கு உரிய நாடகமாக எழுதப்படுகின்றவை நாடக அரங்குகளுக்கு உதவுகின்றன. அப்படிப்பட்டவை, காணும் மக்களின் சுவைகளையும் ஆர்வத்தையும் மனத்தில் கொண்டு எழுதப்படுவன. கொச்சைமொழிகளும் பேச்சுநடையும் அவற்றிற்குத் தேவையாகின்றன. ஆனால் உயர்ந்த நடை இல்லாத காரணத்தால், கற்றவர்கள் அவற்றை விரும்புவதில்லை; வாங்கிப் படிக்காமலும், பிறர் படிக்குமாறு தூண்டாமலும் விடுவதால், அவைகள் இலக்கிய நூல்களாய் வாழ வழி இல்லாமற் போகிறது. கற்றவர்கள் விரும்பத்தக்க வகையில், உயர்ந்த நடையில் நாடகம் எழுதப்பட்டால், அத்தகைய நாடகங்களில் உணர்ச்சியும் உயிரோட்டமும் குறைகின்றன; மக்களின் அன்றாடப் பேச்சு முறையை விட்டு விலகி நிற்பதால் நாடகத்தைப் படிக்கும்போது வாழ்க்கையைப்பற்றிய கற்பனை நிரம்புவதில்லை; அதனால் நாடகத்தின் நோக்கமே நிறைவேறாமல் போகிறது. கற்றவர் ஒருசிலர் அவற்றைப் போற்ற முடிகிறதே அல்லாமல் மற்றவர் விரும்புவதில்லை. கற்றவர்களும், அப்படிப்பட்ட நாடகங்களைப் படிப்பதைவிடக் கட்டுரைகளையும் கதைகளையும் படிப்பதே சுவையானதாக உணர்கிறார்கள். ஏன் எனில், கதைகளிலும் கட்டுரைகளிலும் நேரே நிகழ்ச்சிகளும் கருத்துகளும் எடுத்துரைக்கப்படுகின்றன; நாடகங்களில் உரையாடல்மட்டுமே உள்ளபடியால், மற்ற நிகழ்ச்சி முதலானவற்றைக் கற்பனை செய்து உணர வேண்டிய முயற்சித் துன்பத்துக்கு இடம் உள்ளது. ஆகவே, நாடகங்கள் படிப்பதைவிடக் கதைகளையும் கட்டுரைகளையும் படிப்பது எளிதாக உணர்கிறார்கள். நடிப்பதற்கு உரிய நாடகத்தைப் படிப்பார் இல்லாத நிலையும், படிப்பதற்கு உரிய நாடகத்தை நடிப்பார் இல்லாத