நிலையும் இருந்து வருகின்றன. ஆகவே, தமிழ்நாட்டில் நடிப்பவர்
குழுக்கள் பல இருந்துவந்தபோதிலும், தேர்ந்த நடிகர் பலர் புகழுடன் விளங்கிவந்தபோதிலும்,
நாடக அரங்குகள் பல இருந்தபோதிலும், நாடக இலக்கிய நூல்கள் பலவாக இல்லை. அதனால்
நாடகத் துறையில் தமிழ் வளரவில்லை என்று சிலர் குறைகூறுகின்றனர்.
இந்தக் குறை பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளுக்கு மட்டும்
உரிய குறை அன்று; தமிழிலக்கிய வரலாறு முழுவதும் தொன்றுதொட்டுக் காணப்படும் குறையாக
உள்ளது. சங்க காலத்திலும், இடைக்காலத்திலும் எவ்வளவோ நடிகர்கள் இருந்து வந்தனர்;
அரசர்கள் அவர்களைப் போற்றி வந்தார்கள். ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையும்
இடைக்காலக் கல்வெட்டுகளும் சான்றுகளாக உள்ளன. கோயில்தோறும் இருந்துவந்த மண்டபங்கள்
நாடகக்கலைக்குப் பயன்பட்டு வந்தன. நாடகங்கள் இல்லாமல் திருவிழாக்கள் நடந்ததில்லை.
இவ்வாறு மக்களின் வாழ்க்கையில் காலந்தோறும் நாடகம் சிறப்பிடம் பெற்றிருந்தபோதிலும்,
நாடக இலக்கியம் என்று கூறத்தக்க நூல் ஒன்றும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. நாடகநூல்கள்
இல்லாமற் போகவில்லை. ஆனால் அவற்றைச் சங்கப்பாட்டு போலவோ, இடைக்காலத்துக்
காப்பியம் முதலானவை போலவோ புலவர்கள் போற்றிப் பாராட்டவில்லை; காப்பாற்றவில்லை.
ஆகவே, அந்த நாடக நூல்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மறைந்து போயின.
மற்ற மொழிகளைவிடத் தமிழல் அவ்வாறு நேர்ந்தமைக்குக் காரணம் உள்ளது. தமிழ் மிகப்
பழங்காலத்திலேயே இலக்கிய வளர்ச்சியும் பண்பாடும் பெற்றுவிட்டது. ஆகவே இலக்கிய
மரபுகள் ஏற்பட்டுவிட்டன. புலவர்கள் இலக்கியத்திற்கு என்று திருத்தமாக அமைந்த செந்தமிழ்
நடையைப் போற்றி வளர்த்தார்கள். அது பேச்சுவழக்கைவிட்டு விலகிச் செம்மைப்பட்டு
அமைந்த நடையாக வளர்ந்தது. நடிக்கப்படும் நாடகங்களோ, செந்தமிழ் நடையில் எழுதப்பட்டால்,
நாடக அரங்குகளுக்கு உதவாதன ஆகும். பேச்சுத் தமிழை ஒட்டி எழுதப்பட்டால், புலவர்களால்
தீண்டப்படாதன ஆகும். ஆகவே, புலவர்கள் நாடகம் எழுதுவதை விட்டனர். மற்றவர்கள் எழுதி
நடித்து வந்த நாடங்களைப் புலவர்கள் இலக்கியமாகப் போற்றாமல் விட்டனர். கபிலர்
நக்கீரர் முதலான பழங்காலப் புலவர்கள் நாடகங்கள் பலவற்றை அரங்குகளில் கண்டிருப்பார்கள்.
கம்பர் முதலான இடைக்காலப் புலவர்களும் கண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருவரும்
காளிதாசர் போல் நாடக நூல் இயற்ற முன்வரவில்லை. நாடகம் இயற்றுதல், தமக்குத் தொடர்பு
இல்லாத ஒரு துறை என்று ஒதுங்கிவிட்டனர். அதனால், பழங்காலத்திலும் இடைக்காலத்திலும்
இருந்துவந்த நாடகங்கள் அந்தந்தக் காலத்து அரங்குகளுக்குமட்டுமே பயன்பட்டுப் பிறகு
அழிந்து போயின.
|