இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகக் கலைக்குப்
பெருந்தொண்டு புரிந்த பம்மல் சம்பந்த முதலியாரின் படைப்புகளை எடுத்து ஆராய்ந்தாலும்
இந்த உண்மை விளங்கும். அவர் தாமே நடிக்க வல்லவர்; பல நாடகங்களிலும் நடித்தவர்;
நடிகர் பலர்க்குக் குருவாக விளங்கியவர். நன்றாகப் படித்தவர்; உயர்ந்த நோக்கங்கள்
கொண்டு உயர்ந்த வாழ்வு வாழ்ந்தவர். அவர் தொண்ணூறு நாடகங்கள் எழுதியுள்ளார். நாடக
மேடையின் அனுபவத்தைக் கொண்டு திறம்படக் காட்சிகளையும் சுவைகளையும் கற்பனை செய்து
எழுதியிருக்கிறார். அவற்றுள் பலவற்றை அரங்கேற்றி வெற்றி கண்டிருக்கிறார். அந்த
நிலைகளை ஆராய்ந்து பார்த்தால், ஆங்கிலத்திற்கு ஷேக்ஸ்பியர்போல், தமிழுக்கு அவர்
தொண்டுசெய்ய முயன்றார் என்பது விளங்கும். அவ்வாறு இருந்தும் இன்று அவருடைய நாடக நூல்கள்
இலக்கியமாகப் போற்றப்படவில்லை; மெல்ல மெல்ல மறையும் நிலையில் உள்ளன.
பம்மல் சம்பந்த முதலியார்போல் மற்றவர்கள் அவ்வளவு
மிகுதியான நாடக நூல்கள் எழுதாவிட்டாலும், இரண்டுமூன்று அல்லது பத்துப் பதினைந்து நாடங்கள்
எழுதியவர்கள் உண்டு. எல்லாவற்றையும் சேர்த்து எண்ணிப் பார்த்தால், தமிழில் நாடக
இலக்கியம் வளர்ச்சி பெறவில்லை என்று குறைகூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. தமிழர்
மனப்பான்மையை நாடக இலக்கியத்தைப் போற்றி காப்பாற்றுவதாக இல்லை என்று கூறுவதே
பொருத்தமாக உள்ளது. தமிழர் மனப்பான்மை நாடக அரங்குகளையும் நடிகர்களின் நடிப்புத்
திறமையையும்மட்டும் போற்ற விரும்புவதாக உள்ளது. காப்பியம் முதலான இலக்கிய வகைகளைக்
காலம் கடந்து காப்பதுபோல் நாடகத்தை ஓர் இலக்கிய வகையாகக் கொண்டு போற்றும்
இயல்பு தமிழர்க்கு குறைவு என்று கூறலாம்.
திரிபுகள்
நாடகத் துறையில் சங்கரதாஸ் சுவாமிகளும் பம்மல் சம்பந்த
முதலியாரும் ஈடுபட்டுத் தொண்டு செய்வதற்குமுன், அந்தக் கலையின் மதிப்பு மிகக் குறைவாக
இருந்தது. கற்றவர்கள் அதில் தலையிடவில்லை; அதில் ஈடுபடுவது தம் பெருமைக்கும் கல்விக்கும்
ஏலாதது என்று எண்ணினார்கள். குடும்பப் பெண்களும் பிள்ளைகளும் பார்க்கத் தகாதது நாடகம்
என்ற கருத்து இருந்துவந்தது. தம் மக்களை நாடகக் கொட்டகையை அணுகாதபடி காப்பது பெற்றோரின்
கடமையாக இருந்தது. நாடகம் பார்ப்பதிலேயே இவ்வளவு தடையும் அச்சமும் இருந்த வந்தன
என்றால்,
|