பக்கம் எண்: - 281 -

நாட்டு விடுதலை இயக்கத்தில் ஆர்வம் மிக்கவர்களாய் நாடகத் தொண்டு புரிந்தவர்கள் சிலர். அவர்களுள் மறக்கமுடியாமல் பெயர்பெற்றவர் தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர். ‘கதரின் வெற்றி’, ‘பம்பாய் மெயில்’ முதலிய புரட்சியான நாடகங்களை எழுதி நாடு முழுவதும் நடத்திச் சுதந்திர உணர்ச்சியைப் பெருக்கியவர் அவர். நாகபுரிக் கொடிப் போராட்டத்தை அமைத்து, ‘தேசீயக் கொடி’ என்ற பெயரால் நாடகம் ஒன்று நடத்தினார். தமிழ்நாட்டு நாடகக் குழுவை இங்கிலாந்துவரையில் அழைத்துச் சென்று அங்கும் தமிழ் நாடகங்கள் நடத்திப் புகழ்பெற்ற கலைவீரர் அவர். அவர் தந்த வேறு சில நாடகங்கள் பதிபக்தி, பர்த்ருஹரி முதலியன. அவற்றுள் சில, ஆங்கில அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. அவ்வளவு தேசீய உணர்ச்சியை அவை ஊட்டவல்லவனாக இருந்தன.

கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆட்சியை எதிர்த்து முதல் முறையாகப் போராட்டம் நடத்தித் தூக்கில் இடப்பட்ட பெருவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மனின் வரலாறு நாடகமாக்கப்பட்டது. ‘முதல் முழக்கம்’ என்ற அந்த நாடகத்தை இயற்றியவர் ரா. வேங்கடாசலம். அவர் இயற்றிய மற்றொரு நாடகம் ‘இமயத்தில் நாம்’ என்பது; பழங்காலத் தமிழர் வீரத்தை எடுத்துக்காட்டும் உணர்ச்சி மிகுந்த நாடகம் அது. எத்திராஜுலு இயற்றிய அவ்வையார், தமிழ்நாட்டுப் பழஞ் சிறப்பையும் பண்பாட்டையும் புலவரின் பெருமையையும் எடுத்துரைக்கும் உயர்ந்த நாடகம்.

பாணபுரத்து வீரன் என்பது நாட்டுப் பற்று ஊட்டிப் புகழ் பெற்ற நாடகம். அதை இயற்றியவர் சாமிநாத சர்மா. அவருடைய நூல்களின் இயல்பான எழுச்சியூட்டும் நடையை அந்நாடகத்திலும் காணலாம். ஆங்கில அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நாடகங்களுள் அதுவும் ஒன்று. அவருடைய அபிமன்யு என்ற நாடகமும் சிறந்த தமிழ்நடை வாய்ந்தது.

டி. கே. முத்துசாமி இயற்றிய நாடகங்கள் குமாஸ்தாவின் பெண், கவி காளமேகம், ராஜா பர்த்ருஹரி, வித்தியாசாகர் ஆகியவை.

எஸ். டி. சுந்தரம் இயற்றிய நாடகங்களுள் ‘கவியின் கனவு’ இலக்கியச் சுவை வாய்ந்த தேசீய நாடகம் ஆகும்.

மந்திரி குமாரி, மணிமகுடம் முதலிய நாடகங்களைக் கலைஞர் கருணாநிதி கவர்ச்சிமிக்க நடையில் எழுதினார். சிலப்பதிகாரத்தைப் பூம்புகார் என்ற பெயரில் அழகிய நாடகம் ஆக்கியுள்ளார். அகிலன் என்னும் சிறந்த நாவலாசிரியர் அளித்துள்ள நாடகங்கள் புயல், வாழ்வின் இன்பம் ஆகியவை. தேவனின் நாடகங்கள் முழுதும் பேச்சுத் தமிழில் எழுதப்பட்டவை. அவை