பக்கம் எண்: - 282 -

கோமதியின் காதலன், மைதிலி, துப்பறியும் சாம்பு முதலியவை; எல்லாம் நகைச்சுவை மிகுந்தவை.

நாட்டிய நாடகங்கள் பல அரங்குகளில் இடம் பெற்றன. பழைய குறவஞ்சி நாடகங்கள் நடிக்கப்பட்டன. ஆண்டாள் முதலானவர்களைப்பற்றிய புதிய நாட்டிய நாடகங்களும் இயற்றப்பட்டன.

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் இசைநாடகமாகவே நடிக்கப்பட்டது. காவியமாகப் பாரதியாரால் இயற்றப்பட்ட அதைச் சகஸ்ரநாமம் நாடகக் குழுவினர் இசை நாடகமாக நடித்துச் சுவை பெறச் செய்தார்கள். டி. கே. எஸ். நாடகக் குழுவினர் இளங்கோவடிகள், அவ்வையார் முதலான பழைய வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கையை நாடக மேடையில் விளங்கச்செய்து புகழ் பெற்றார்கள். கம்பர் முதலான புலவர்களின் வரலாறுகளும் மாணிக்கவாசகர் முதலான பக்தர்களின் வரலாறுகளும் கண்ணப்பா குழு, எம். எஸ். டி. சபை முதலான நாடகக் குழுவினர்களால் நாடகமாக்கப்பட்டன.

பி. எஸ். ராமையா பல நாடகங்களைக் கலைத்திறனுடன் எழுதியவர். மல்லியம் மங்களம், தேரோட்டி மகன், போலீஸ்காரன் மகள், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், கைவிளக்கு என்பவை குறிப்பிடத்தகுந்தவை. அவருடைய கற்பனைத்திறன் சிறுகதைகளில் விளங்குவது போலவே, நாடகங்களிலும் திகழ்கிறது. ‘தேரோட்டி மகன்’ என்ற நாடகம், பாரதத்தில் வரும் கர்ணனைப் பற்றியது. தேரோட்டியின் மகனாகவே அவன் பலராலும் அறியப் படுகிறான். அரச மரபினன் என்பது குந்திக்கும், கண்ணனுக்கும், அவனுக்குமே தெரியும். ஆனால், வற்புறுத்தலால் அவனை மணந்து கொண்ட மனைவிக்கு, ஒரு க்ஷத்திரியனை மணந்துகொள்ளாமல், தேரோட்டியின் மகனை மணந்துகொண்டோமே என்ற குறை நெஞ்சில் இருந்துவருகிறது. அதனால் கர்ணன் எவ்வளவோ சிறப்பெல்லாம் பெற்றிருந்தும், மனைவியின் அன்பையும் மதிப்பையும் பெறமுடியாமல் வாடுகிறான். கௌரவர் சேனைத்தலைவனாய்ப் போர்க்களத்துக்குப் புறப்படும்போதும், ஆரத்தி எடுத்து வாழ்த்துக்கூறி விடைகொடுக்க மனைவி முன்வரவில்லை. ஆனால், கர்ணன் போரில் மாண்டபிறகு, உண்மை உணர்கிறாள்; தன் புறக்கணிப்பை - சாதிச் செருக்கால் செய்த தவற்றை - நினைந்து உருகிப் புலம்புகிறாள். இவ்வாறு கற்பனை குழைத்து நாடகத்தை மிகச் சுவையாக அமைத்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தால் ஏற்பட்ட எழுச்சி, பல நாடகங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. நடிகர்களில் தலைமை பெற்றவர்கள் பலர் தேசீய உணர்ச்சி உள்ளவர்களாக விளங்கி நாட்டுப்பற்றைத் தம் நாடகங்களில் கலந்து அளித்தார்கள். வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய அரசர்கள், சிற்றரசர்கள், புலவர்கள் முதலானவர்களின் வாழ்க்கையை ஒட்டிய நாடகங்கள்