பக்கம் எண்: - 283 -

பல இயற்றப்பட்டன. அவ்வையார், ராஜராஜசோழன், கட்டபொம்மன் முதலான நாடகங்கள் அத்தகையவை. கல்கியின் வரலாற்று நாவல்களான பார்த்திபன் கனவும், சிவகாமியின் சபதமும் நாடகங்களாக அமைக்கப்பட்டன. சமுதாயத்தில் உள்ள சாதி வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலியவற்றின் கொடுமைகளை விளக்கும் நாடகங்கள் இயற்றப்பட்டன. கண்ணீர்த்துளி, வேலைக்காரி, ஓர் இரவு, சந்திரமோகன், நீதி தேவன் மயக்கம் முதலான நாடகங்கள் சிறந்த நோக்குடன் அறிஞர் அண்ணாதுரையால் இயற்றப்பட்டவை. அவர் நாடகங்களில் கையாண்ட உரைநடை புதுமையானது; சிந்தனையைக் கிளருவது, சமுதாயத்தின் இருண்ட பகுதிகளை - மேல்மட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையின் ஊழல்களை - மறைக்காமல் பலரும் கண்டு சிரிக்கும் வகையில் வெளிப்படுத்திச் சீர்திருத்தக் கருத்துகளுக்கு நாடகங்களை நன்கு பயன்படுத்தியவர் அவர். அவர் எழுதிய நாடகங்களில் அவரே திறம்பட நடித்து மகிழ்ந்தவர்; பல நாடகக் குழுக்களையும், கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் இத்துறையில் ஊக்கமூட்டிப் போற்றி வளர்த்தவர்.

கு. சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘அந்தமான் கைதி’ பலமுறை நடிக்கப்பட்டுப் புகழ்பெற்றது. அதுவும் சிறந்த சமுதாய சீர்திருத்த நாடகம் ஆகும். நாரண துரைக்கண்ணன் இயற்றிய ‘உயிரோவியம்’ முதலான நாடகங்களும் அத்தகைய சிறப்பு உள்ளவை.

திரைப்படமும் வானொலியும்

இந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் நல்ல நாடகங்கள் எழுதவல்ல எழுத்தாளர் பலரின் திறமைகளை எல்லாம் திரைப்படம் பயன்படுத்திக்கொண்டது. இளங்கோ, கலைஞர் கருணாநிதி, ஸ்ரீதர், பாண்டுரங்கன் முதலியவர்கள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தவர்கள், பல நாவல்கள் திரைப்படத்துக்கு உரிய வகையில் அமைத்து நடிக்கப்படுகின்றன. திரைப்படம் இல்லையானால், அவைகள் எல்லாம் நாடகங்களாக எழுதப்பட்டிருக்கும், திரைப்படத்துறை திறமையான நடிகர்களைத் தன்னிடம் கவர்ந்துகொள்வதால், நாடக மேடைக்குச் சிறந்த நடிகர்கள் இல்லாத குறையும் ஏற்படுகிறது. நாடகம் திரைப்படத்தோடு போட்டியிட்டுப் பொருளாதாரத் துறையில் வெற்றிப்பெற முடியாத காரணத்தால், நாடக வளர்ச்சி குன்றிவருகிறது; ஆகவே, நாடக நூல்கள் எழுதுவோர்க்கு ஊக்கம் இல்லாமற் போகிறது.