மறவர் சமுதாயமும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் வழக்கறிஞர்களும்
நீதிபதிகளும் பல கோணங்களில் காட்டப்படுகிறார்கள். ‘முத்துமீனாட்சி’ என்னும் நாவல்
அவற்றைவிடப் புதுமை மிகுந்தது; புரட்சியானது. இளமையில் விதவையானவள் ஒருத்தி படும்
துன்பங்களை அவளே எடுத்துரைக்கும் முறையில் (தன்வரலாறு என்ற போக்கில்) நாவல் அமைந்துள்ளது.
இவற்றின் வாயிலாக மாதவையா, தமிழ் நாவல் துறையில் உள்ளீடு (Content), வடிவு (form)
ஆகிய இருவகையிலும் புதுமை வளர்த்தவர் எனலாம்.
மாதவையா (1872 - 1925) அரசாங்க வேளையிலிருந்து ஓய்வு
பெற்றபின் ‘பஞ்சாமிர்தம்’ என்னும் இதழை நடத்தி அதில் கவிதை, சிறுகதை, இலக்கியத்
திறனாய்வு, அரசியல் கட்டுரைகள் முதலியன வெளிவரச் செய்தார். ‘கோணக் கோபாலன்’
என்ற புனைபெயரில் தாமே கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தார். அவர்க்கு விருப்பமான
சமூகச் சீர்திருத்தத் தொண்டுக்கு அந்த இதழ் ஒரு நல்ல கருவியாக இருந்தது. பழைய கண்மூடி
வழக்கங்களை எதிர்த்துப் போராடினார். சிறுவர்கள் படிக்கக்கூடிய நடையில் பால ராமாயணம்,
பால விநோதக் கதைகள், தக்ஷண சரித்திர வீரர் என்பன இயற்றினார். திருமலை சேதுபதி,
பாரிஸ்டர் பஞ்சநதம் என்பவை நாடங்கள், ஷேக்ஸ்பியரின் ஒதேல்லோ நாடகத்தைத்
தமிழில் தந்தார். பொது தர்ம சத்கீத மஞ்சரி, புதுமாதிரிக் கல்யாணப்பாடல் என்பன
அவர் இயற்றிய பாடல் தொகுதிகள். ஆசாரச் சீர்திருத்தம் என்னும் நூல் அவருடைய சீர்திருத்த
ஆர்வத்தைப் புலப்படுத்தும். அவர் இயற்றிய சிறுகதைகள் பல. அவை சிறுகதை வளர்ச்சிக்குத்
தூண்டுகோலாக அமைந்தவை; மூன்று தொகுதிகளாக, ‘குசிகர் குட்டிக்கதைகள்’ என்னும் பெயரால்
வெளியாயின.
மாதவையாவுக்குப் பிறகு நாவல்துறையில் மீண்டும் இடைவெளி
ஏற்பட்டது. கல்வி பெருகி இலக்கியத் தரம் உள்ள கதைகளைப் பிறர் படைப்பதற்குமுன்
ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், பொன்னுசாமிப் பிள்ளை, கோதை
நாயகி அம்மையார், ரங்கராஜு முதலியோரின் பொழுதுபோக்கு நாவல்களும் துப்பறியும்
நாவல்களும் படிப்போர்க்கு விருந்தாக இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை, மேற்கு நாட்டாரின்
துப்பறியும் நாவல்களின் தழுவல்களாகவே இருந்தன. தமிழ்ச் சமுதாயத்தின் படப்பிடிப்புகளாக,
கண்ணாடிகளாக, ஒருசில மட்டுமே அமைந்தன.
காந்தியடிகள் நெறியிலும் வாழ்விலும் தம் நெஞ்சைப்
பறிகொடுத்து, இந்த நாட்டுக் கிராமங்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட கே.எஸ்.
வெங்கடரமணி நாவல் துறையில் ஈடுபட்டார். முதலில் ஆங்கிலத்தில் எழுதி
|