பக்கம் எண்: - 287 -

அடுத்த நாவல்கள்

வேதநாயகம் பிள்ளை போலவே வேறு துறைகளில் தொழில் செய்துகொண்டே தமிழ் இலக்கியத்தை வளர்க்கப் பாடுபட்டோர் பலர். அவர்களுள் நடேச சாஸ்திரி (1859 - 1906) என்பவர் ஒருவர். திராவிட பூர்வகாலக் கதைகள், மத்திய காலக் கதைகள் எனப் பழைய கதைகளைத் திரட்டி எழுத்தில் தந்தார். முத்திரா ராக்ஷசம் என்பதை வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதினார். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களை (Measure for Measure, Twelfth Night) தமிழில் கதையாக்கித் தந்தார். மாமி கொலுவிருக்கை, கோமளம் குமரியானது, திக்கற்ற இரு குழந்தைகள், மதிகெட்ட மனைவி என்பவை அவர் இயற்றிய கதை நூல்கள்.

வாழ்க்கையை உள்ளவாறு காட்டும் பாங்கு, நடப்பியல் (Realism) எனப்படுவதை முதல்முதலில் தமிழில் ராஜம் அய்யர் (1872 - 1898) எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் நாவலில் காண்கிறோம். அதை அடுத்து, அதே பாங்கில் எழுதப்பட்டது மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’. வேதநாயகம் பிள்ளையின் நாவல்களுக்கும் இந்த இரண்டு நாவல்களுக்கும் இடையே இருபதாண்டுக் கால இடைவெளி இருக்கிறது. அப்போது நாவல்கள் தோன்றாமல் இல்லை; குருசாமி சர்மா எழுதிய ‘பிரேம கலாவதியம்’ முதலியன சில இருந்தன. ஆனால் அவை இலக்கியத் தரம் பெறவில்லை. ‘கமலாம்பாள் சரித்திரம்’ விவேகசிந்தாமணி என்னும் இதழில் 1893 - 95 - இல் தொடர்கதையாக வந்து, 1896 - இல் புத்தகமாக வெளியிடப்பட்டது. கிராம வாழ்க்கையும் ஜல்லிக்கட்டு என்னும் எருதாட்டத் திருவிழாவும் மற்றப் பழக்கவழக்கங்களும் அக்காலத்தில் இருந்தவாறே விளக்கப்பட்டுள்ளன. இளைஞரின் காதல் ஒருபுறமும், நடுவயதினரின் அன்பான குடும்ப வாழ்வு ஒருபுறமும் இருந்து முரண்படுவதைத் தீட்டிக் காட்டியுள்ளார். அவர்க்கு அடுத்தாற்போல் நாவல் எழுதிய மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’ (1898) தெளிவான பாத்திரப் படைப்பு உடையது. அவருடைய சீர்திருத்த ஆர்வம் அதில் நன்கு புலப்படுகிறது. ‘விஜய மார்த்தாண்டன்’, ‘முத்து மீனாட்சி’ (1903) என்னும் நாவல்களையும் அவர் இயற்றினார். பத்மாவதி சரித்திரத்தில் பல நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. ஒன்று மற்றொன்றினுக்குத் தொடக்கமாய் வளர்ந்து செல்லக் காண்கிறோம். பத்மாவதியின்மேல் அவளுடைய கணவனுக்கு ஏற்படும் ஐயமே நீண்ட சிக்கலாய் வளர்ந்து முடிகிறது. ‘விஜயமார்த்தாண்டம்’ என்னும் கதையில்