|
16.
கதை இலக்கியம்
முதல்
நாவல்கள்
சென்ற நூற்றாண்டில் 1876 - இல் வேதநாயகம் பிள்ளை
என்ற அறிஞர் முதல்முதலாகத் தமிழுக்கு நாவல் இலக்கியத்தை அளித்தார். அவர் மாவட்ட
நீதிபதியாக இருந்தவர்; ஆங்கிலம் அறிந்தவர்; ஆங்கிலேயருடன் தொடர்பு உள்ளவர்.
ஆங்கிலத்தில் நாவல் இலக்கியம் வளர்ந்திருப்பதையும், அதைப் பொழுதுபோக்காகப்
பலர் படித்துப் பயன்பெறுவதையும் உணர்ந்து, தமிழர்களும் அவ்வாறு படிக்க வாய்ப்புப்
பெறவேண்டும் என்று கருதினார். அந்தக் காலத்தில் செய்யுள் நூல்கள் பல எழுதிப் புகழ்
பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்; தாமும் பாடல்
பல இயற்றியவர். ஆனாலும், செய்யுள் நூல்களை எல்லாரும் படிக்கமுடியாது என்பதை உணர்ந்து,
உரைநடை வாயிலாக நல்ல கருத்துகளை உணர்த்த வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். கதை
கேட்கும் ஆர்வம் மக்களுக்கு இயல்பாக இருப்பதால், நாவல்கள் வாயிலாகத் தாம் உணர்த்த
விரும்பியவற்றை உணர்த்த முன்வந்தார். பிரதாப முதலியார் சரித்திரம் (1876), சுகுணசுந்தரி
(1887) என்னும் நாவல்களை இயற்றினார். அவற்றில் பலவகை மாந்தர்களைப் படைத்தார்;
பலவகை உணர்ச்சிகளை அமைத்தார்; பல நீதிகளைப் புகட்டினார். தஞ்சை திருச்சி மாவட்டங்களில்
கிராமங்களிலும் நகரங்களிலும் தாம் பெற்ற அனுபவங்களைக்கொண்டு, குடும்ப சமுதாய வாழ்க்கை
நிலைகளைச் சொல்லோவியமாக்கிக் காட்டினார்.
பின்னர் எழுதிய நாவலைவிட, முதலில் எழுதிய பிரதாப முதலியார்
சரித்திரமே இலக்கியத் தரம் உடையது. கதைத் தலைவன், தலைவி ஆகிய இருவரின் பெற்றோர்க்கு
இடையே பூசலும் போராட்டமும் நடக்கின்றன. தலைவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
ஒரு வேட்டைக் காட்சியைக் காண்பதற்கு முயல்கிறான். பல இன்னல்களை எதிர்ப்படுகிறான்.
பணக்கார உழவர் குடும்பத்துப் போராட்டங்களைக் கதை சுவையாக வளர்ந்துச் செல்கிறது.
இரண்டாம் நாவலில், கதைத் தலைவியை ஓர் அரசன் கவர்ந்து செல்கிறான். வழியில்
கன்னி மாடத்தில் புகுந்துகொள்கிறாள் அவள். அரசன் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதற்குள்
அந்த அரசனுடைய ஆட்சியை அமைச்சன் கைப்பற்ற முயல்கிறான். போராட்டங்கள் வளர்கின்றன.
முதல் நாவல், கதை மாந்தர் (பாத்திரம்) ஒருவர் கதை கூறுவதாக அமைந்துள்ளது. இரண்டாவதில்
ஆசிரியரே கதை சொல்கிறார். நகைச்சுவை நிரம்பியுள்ளது. நீதிமொழிகள் நிரம்பியுள்ளன.
|