பக்கம் எண்: - 323 -

கோ. வடிவேலு செட்டியார் (1863 - 1936) பலதுறைப் புலமை நிரம்பியவர். இலக்கணம், இலக்கியம், தருக்கம் முதலியவற்றில் மிக்க வல்லவர். அவருக்கு அவற்றில் இருந்த ஆர்வத்தைவிட அத்வைத சமயத்துறையில் ஈடுபாடு மிகுதி. அவர் பலருக்கு இலக்கண இலக்கியம் தருக்கம் வேதாந்தம் முதலியவற்றைக் கற்பித்து அறிஞர் ஆக்கியவர். ‘லோகோபகாரி’ என்னும் வார இதழின் ஆசிரியராக இருந்தவர். ‘சக்கரவர்த்தினி’ என்னும் திங்கள் இதழையும் நடத்தினார். பல வேதாந்த நூல்களை உரைநடையில் எழுதினார். திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு அவர் எழுதிய விளக்கம் எளிய நடையில் அமைந்தது; ஆழ்ந்த நுட்பமும் தெளிவும் உடையது. அவருடைய கட்டுரைகள் ‘வியாசபோதினி’ என்ற பெயரால் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. அவருடைய நடையில் அருஞ்சொற்கள் குறைவு; வடசொற்கள் சில கலக்கும். கற்றவர் உள்ளத்தை தொடக்கூடிய வகையில் கருத்துகளைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் விளக்கி எழுதும் திறனை அவருடைய நூல்களில் காணலாம். உமாமகேசுவரம் பிள்ளை தோற்றுவித்துப் பாடுபட்டு வளர்த்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் விளங்கிப் பணி பல புரிந்த வேங்கடாசலம் பிள்ளை முதலானவர்களின் இலக்கியத் தொண்டுகள் பாராட்டத்தக்கன.

பூரணலிங்கம் பிள்ளை (1866 - 1947) சில கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர். ‘தமிழ்க் கட்டுரைகள்’, ‘மருத்துவன் மகள்’, ‘தப்பிலி’, ‘கதையும் கற்பனையும்’ முதலான உரைநடை நூல்களைத் தமிழில் இயற்றினார்.

கா. சுப்பிரமணிய பிள்ளை (18851 - 1945) சட்டத்துறையில் புகழ் பெற்றவர்; தமிழ்த்துறையிலும் சிறந்த தொண்டு ஆற்றியவர். திருஞானசம்பந்தர் முதலான சைவ சமயச் சான்றோர் பலருடைய வரலாற்றை உரைநடையில் தந்தவர். திருவாசகத்துக்கு முதல்முதல் உரை எழுதியவர் அவரே. ‘தமிழிலக்கிய வரலாறு’ என்னும் நூலும் அவர் இயற்றினார். அவருடைய நுட்பமான ஆராய்ச்சித் திறனை வேறு பல நூல்களிலும் காணலாம்.

      பழஞ்சொற்களைக் கையாண்டு பழந்தமிழ் இலக்கிய நடையில் உரைநூல் பல இயற்றித் தந்த மற்றொரு புலவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் (1884 - 1944). பல செய்யுள்நூல்களுக்கு உரை எழுதிப் பெருமை பெற்றவர். கபிலர், நக்கீரர், வேளிர் வரலாறு என்பன அவருடைய ஆராய்ச்சி நூல்கள். அவர் எழுதிய கட்டுரைகள் பல. அவை சிலதொகுதிகளாக வெளிவந்துள்ளன.


1 1888 என்றும் சிலர் கூறுகிறார்கள்.