பக்கம் எண்: - 324 -

கதிரேசச் செட்டியார் (1881 - 1953) செறிவான நடையில் பழைய இலக்கியத்தில் உள்ள சொற்களை ஆண்டு நூல்கள் எழுதியவர். ‘உரைநடைக் கோவை’ என்னும் நூலின் கட்டுரைகளில் பழைய இலக்கியங்களின் மணத்தை உணரலாம். வடமொழியும் நன்கு கற்றவராதலின், வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார். அவற்றுள் மிருச்சகடிகத்தின் மொழிபெயர்ப்பு ஆகிய மண்ணியல் சிறுதேர் என்பது ஒன்று. சில செய்யுள் நூல்களையும் தந்துள்ளார். திருவாசகத்தின் முற்பகுதிக்கு விரிவாக உரை எழுதியுள்ளார்; ஆழ்ந்த உட்பொருள்களை எடுத்து விளக்கும் சிறப்பு அமைந்த உரை அது.

வேங்கடராஜுலு ரெட்டியார் வடமொழியும், திராவிட மொழிகள் நான்கும் கற்றறிந்தவர்; அந்த மொழிகளின் இலக்கணங்களையும், சொல்லமைப்பையும் ஒப்பிடும் ஆராய்ச்சியில் தேர்ந்தவர்; பழைய இலக்கண நடையில் பல கட்டுரைகளும், சில ஆராய்ச்சி நூல்களும் இயற்றினார். அவருடைய நூல்களில் புலமையின் ஆழம் புலப்படும்.

சோமசுந்தர பாரதியார் (1879 - 1959) வழக்கறிஞராக இருந்து நாட்டுத் தொண்டிலும் மொழித் தொண்டிலும் ஆர்வமுடன் ஈடுபட்டார். தமிழ் மொழியின் நன்மைகளைக் காப்பதில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர். தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கண நூலின் சில பகுதிகளுக்குப் புதிய முறையில் ஆராய்ச்சியுரை எழுதியவர். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘சேரர் தாயமுறை’ என்பவை அவருடைய ஆராய்ச்சியையும் புலமையையும் விளக்கும் உரைநடை நூல்கள். ‘மாரிவாயில்’ என்பது அவர் இயற்றிய செய்யுள் நூல். பாரதக் கதையினை ஒட்டி, அருச்சுனனுக்குப் பாண்டியன்மகள் தூது அனுப்பியதாகக் கற்பனை செய்து எழுதிய நூல் அது. வேறு பல கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

பழைய இலக்கியத்தில் தேர்ந்து புதிய இலக்கிய வளர்ச்சியையும் போற்றிய புலவர்கள் ஒரு சிலர். அவர்களுள் எஸ். வையாபுரிப் பிள்ளை (1891 - 1956) ஒருவர். வழக்கறிஞர் துறையை விட்டபின், தமிழ்த் தொண்டிலேயே உழைக்கலானார். தமிழ்ப் பேரகராதியாகிய ‘லெக்சிகனை’ உருவாக்கினார். சங்க இலக்கியம் முழுமையும் பதிப்பித்தார். அவருடைய ஆராய்ச்சியில் கண்டவற்றைப் பல உரைநடை நூல்களாக எழுதியுள்ளார். ஆராய்ச்சி முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும், அவருடயை ஆராய்ச்சி முறை நன்கு அமைந்தது. இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய தீபம், இலக்கிய உதயம், இலக்கிய மணிமாலை, இலக்கிய விளக்கம் முதலிய பல நூல்கள் அரிய உழைப்பின் பயனாக எழுதப்பட்டவை. புதுவகை இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக, ராஜி என்ற நாவலும் எழுதினார்; அவருடைய சிறுகதைகள் ‘சிறுகதை மஞ்சரி’ என்ற தொகுப்பாக உள்ளன.