பக்கம் எண்: - 325 -

அவரைப்போலவே வழக்கறிஞராக இருந்து அதை விட்டுத் தமிழறிஞராய் விளங்கித் தொண்டு புரிந்தவர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961). அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் பல்சுவை நிரம்பியவை. கற்றவர்கள் ஆர்வத்துடன் கூடி அவற்றைக் கேட்டு மகிழ்ந்தனர். இலக்கியக் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வரும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் எதுகைமோனைகளும் இலக்கியத் தொடர்களும் அடுக்கடுக்காக வந்து அழகுபடுத்தும். இலக்கிய மேற்கோள்கள் பல அமைந்து பொலிவுற்ற அவருடைய பேச்சு கேட்போர்க்கு கலைவிருந்தாக விளங்கியது போலவே, எழுத்துநடையும் படிப்பவருக்கு சுவை தந்து கலையின்பம் ஊட்டும். அழகான நடையில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட உரைநடை நூல்களை இயற்றியளித்த சிறப்பு அவருக்கு உரியது. ‘ஊரம் பேரும்’ அவர்தம் சிறந்த ஆய்வு நூல். மொழியியல் துறையில் இணையிலா ஆர்வம்கொண்டு சொற்பிறப்பு ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக உழைத்து நூல்பல இயற்றித் தந்துள்ளார் தேவநேயப் பாவாணர். வி. ஐ. சுப்பிரமணியமும் அகத்தியலிங்கமும் மொழியியல் துறையில் மேற்கு நாடுகளும் போற்றுமாறு பணி பல புரிந்தவர்கள்.

அவ்வை துரைசாமி பிள்ளை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த உரையாசிரியராய்ப் பல நூல்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தந்துள்ளார்.

டாக்டர் அ. சிதம்பரநாத செட்டியார் (1907 - 1967) தம் பரந்த உலகியல் அறிவைத் தமிழுக்குப் பயன்படுத்தியர். மிடுக்கான நடையில் அவர் எழுதிய கட்டுரைகள் பல. ‘முன்பனிக்காலம்’, ‘தமிழோசை’, ‘தமிழ் காட்டும் உலகு’ ஆகியவை அவர் இயற்றிய நூல்களுள் சிறந்தவை. எடுத்த பொருளைத் தெளிவாக நேரே விளக்குவதும், பழந்தமிழ்ச் சொற்களை இடையிடையே கலந்து மெருகு ஊட்டுவதும் அவருடைய எழுத்தின் சிறப்பியல்புகள்.

நடை எளிமை

பேச்சு வழக்கில் உள்ள சொற்களைப் புறக்கணித்து இலக்கியத்தில் வழங்கும் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தி, அவற்றைச் செறிவாக அமைத்து எதுகை மோனைகளை வைத்து எழுதுவதே பழைய உரைநடை. உரைநடை என்ற பெயரே பழைய நூல்களின் உரையில் உள்ள நடை என்பதை விளக்கும். பழைய உரையாசிரியர்கள் பலர் அவ்வாறு இலக்கியச் சொற்களைக் கொண்டு செறிவாக எழுதி வந்தார்கள். அந்த நடையில் திட்பமும் ஆழமும் இருப்பது உண்மையே. ஆனால் இலக்கியம் கற்றுப் பழகியவர்களுக்குமட்டுமே அந்த உரைநடை விளங்கும். எல்லோராலும் அதைப் படித்து உணரமுடியாது. காலம் மாறி விட்டது. மக்கள் பலரும் விழித்தெழுந்துவிட்டார்கள். அறிவுச் செல்வம் ஒரு சிலருக்கே உரியது என்ற