பக்கம் எண்: - 326 -

நிலைமை மாறிவிட்டது. அச்சு யந்திரங்கள் பெருகி, எழுத்தறிவும் வளர்ந்த நிலையால், அச்சு நூல்கள் பலருக்கும் பயன்படுமாறு அமையவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆகவே, சிலருக்குமட்டுமே பயன்படும் தமிழ்நடை இக்காலத்திற்கு ஏலாதது ஆகிவிட்டது. உரைநடை எளிய சொற்களால் தடையில்லாமல் நேரே பொருள் தருவதாய் அமைய வேண்டும் என்ற நிலையை அறிஞர்கள் உடன்பட்டுவிட்டார்கள். உரைநடை இவ்வாறு அமைவது இருக்க, பாட்டே இவ்வாறு எளிமையாய் அமைய வேண்டும் என்று பாரதியார் பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். பாரதியாரைப் புகழ்ந்து கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடிய ‘பாரதியும் பட்டிக்காட்டானும்’ என்ற பாடலில், கேட்டவுடனே எளிதில் விளங்கும் பாடலின் தன்மையை வியந்து பாராட்டியுள்ளார். ‘பாண்டியன் பரிசு’ என்ற தம் காப்பியத்துக்கு முன்னுரை எழுதிய பாரதிதாசனும் எளிய நடையால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் நோக்கத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பாடல்களிலேயே படித்தவுடன் பொருள் விளங்கும் எளிமை வேண்டும் என்று இக்காலம் கோருமானால், உரைநடை எளிய சொற்களால் தெளிவாக அமையவேண்டும் என்ற தேவையைப்பற்றிக் கூறவேண்டியதில்லை. கரடுமுரடாக, எளிதில் விளங்காததாக, அருஞ்சொற்கள் நிறைந்ததாக எழுதப்படும் உரைநடை இன்று பலரை எட்டுவதில்லை. ஆராய்ச்சித்துறையில் இறங்கும் ஒருசிலர் மட்டுமே, அதற்கு உரிய தேவை நேரும்போது மட்டுமே, அத்தகைய கடுமையான உரைநடை நூல்களைப் பார்க்கின்றார்கள். ஆகவே, இன்று உள்ள தமிழ் நடை எளிமை நோக்கிப் படிப்படியாக வளர்ந்து அமைந்தது எனலாம். இராமலிங்கரும் வேதநாயகரும் செய்யுளில் வளர்த்த எளிமையைத் திரு. வி. கலியாணசுந்தரரும், உ. வே. சாமிநாதய்யரும் உரைநடையில் வளர்த்தனர். இருபதாம் நூற்றாண்டில் செய்தித்தாள்களும் இதழ்களும் பல தோன்றி மக்களை அணுகுவதற்கு இந்த எளிய நடையே பயன்பட்டது. ஆகவே, பத்திரிகை ஆசிரியராக இருந்து அனுபவம் பெற்ற தமிழ்ப் புலவராகிய திரு. வி. கலியாணசுந்தரர் அந்த எளிமையையும் ஒருவகை இனிமையையும் நடையில் கூட்டிப் பயனுள்ளதாக்கினார். பழைய இலக்கியத்திலேயே தோய்ந்த புலவராகிய சாமிநாதய்யர், தாம் அந்த இலக்கிய அனுபவத்தைப்பற்றிச் சொல்லும் கருத்துகளை இதழ்களிலும் நூல்களிலும் எழுதிவந்தபோது எளிய நடையிலே சொன்னால்தான் பலருக்குப் பயன்படும் என்பதை உணர்ந்து எழுதினார். பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் தாம் எழுதிய கணக்கற்ற பாடப் புத்தகங்கள் வாயிலாக அந்த எளிமையைத் தமிழில் வாழ வைத்தார்.