பக்கம் எண்: - 327 -

மிக எளிய நடையில் பள்ளிக்கூடச் சிறுவர்களுக்கும் உரிய வகையில் பல நூல்கள் எழுதிப் பெருமை பெற்றவர் கா. நமச்சிவாய முதலியார் (1876 - 1931). நாற்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளிகளில் தமிழ் படித்தவர்களுள் அவருடைய புத்தகங்கள் படிக்காதவர் யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய நிலைமை இருந்தது. உயர்நிலைப்பள்ளிகளிலும் சில கல்லூரிகளிலும் தமிழாசிரியராகப்  பணிபுரிந்த அவர், தமிழின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தார். கீசகன் என்னும் இதிகாச பாத்திரத்தைப்பற்றியும் பிருதிவிராசன் என்னும் வரலாற்று மன்னனைப்பற்றியும், அவர் இயற்றிய நாடகங்களும் எளிய தெளிவான நடையில் அமைந்தவை. ஜனகன், தேசிங்குராஜன் ஆகியோரின் வரலாறுகளையும் அவர் தமிழில் எழுதினார். தேசிங்கு தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே செஞ்சி என்னும் ஊரில் பெரிய மலைக்கோட்டை அமைத்து  அரசாண்ட சிற்றரசன்; முகம்மதியர் ஆட்சியுடன் ஒத்துப்போகாமல் எதிர்த்து ஒப்பற்ற வீரத்தைப் புலப்படுத்தி ஆண்ட அந்தச் சிற்றரசனைப்பற்றித் தமிழில் வழங்கிவந்த நாட்டுப் பாடல்கள் பல. அவனுடைய வரலாற்றை அவர் நல்ல தமிழ் நூலாக்கித் தந்தார். தணிகைத் தவப்பயன்மாலை என்னும் வழிபாட்டு நூலையும் செய்யுளில் இயற்றினார்.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழி இலக்கியத்திலிருந்து கடன் வாங்கிக் காப்பியங்களையும் புராணங்களையும் வளர்த்ததுபோல், பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மொழிகளின் இலக்கியங்களிலிருந்து கடன் வாங்கிப் பல புதுவகை இலக்கியங்களைத் தமிழ் வளர்த்தது. ஆயினும் தமிழின் இயல்பான வளர்ச்சியோ பண்போ குன்றாமல், நாட்டுமக்களின் வாழ்க்கை முறைகளையும் உணர்ச்சிப் பாங்குகளையும் எடுத்துக்காட்டும் வகையில் தமிழுக்கு உரிய இலக்கியங்களாகவே அவை விளங்கி வருகின்றன. தமிழிலக்கியம் தனிச்சிறப்பு உடையதாகவே திகழ்ந்துவரக் காண்கிறோம். ஆயினும் இந்த நூற்றாண்டுகளின் வேறொரு வகையான செல்வாக்கு அதைப் பற்றியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அது, பொதுவாக உலகெங்கும் ஏற்பட்டு வரும் மாறுதல் ஆகும். அதுதான், அறிவியல் (சயன்ஸ்) வளர்ச்சியாலும், அதன் விளைவாக வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து முதலியவற்றின் வேகத்தாலும் நேர்ந்துள்ள மாறுதல் ஆகும். படிப்பவர் தொகை பெருகிவருகிறது; மக்களிடையே விழிப்புணர்ச்சி மிகுந்துவருகிறது; பல நாட்டு மக்களின் கொள்கைகளும் பழக்கவழக்கங்களும் மரபுகளும் வந்து மோதிக் கலப்புறும் கலப்பு மிகுதியாகி வருகிறது; அச்சுக் கருவிகளின் துணையால் ஒருவர் படித்துச் சொல்லப் பலர் கேட்கும் வழக்கம் குறைந்து, பலருக்கும் நூல்களும் இதழ்களும் கிடைத்துப் பலரும் தாமே படித்து அறியும் வாய்ப்பு வளர்ந்து வருகிறது. இந்த மாறுதல்களுக்கு ஏற்ப, ஒரு