பக்கம் எண்: - 328 -

சிலருக்கே விளங்கக்கூடிய புலமை நடையில் எழுதும் வழக்கம் குறைந்து, பலருக்கும் விளங்கக்கூடிய எளிய நடையில் நூல்கள் எழுதும் முறை செல்வாக்குப் பெற்று வருகிறது. ஆகவே எதுகை மோனைகளும் மரபு முறைகளும் மிகுந்த செய்யுள் நூல்கள் குறைந்து, பேச்சு நடையினைப் பின்பற்றி நேரே கருத்துகளை உணர்த்தும் வாக்கியங்களில் எழுதும் உரைநடை நூல்கள் மிகுந்து வருகின்றன. இலக்கிய ஆராய்ச்சி முதலான பொருள்பற்றிய கட்டுரைகளிலும் நூல்களிலும் இன்னும் சிலர் பழைய அருஞ்சொல் நடையைப் பின்பற்றியபோதிலும், நாவல், சிறுகதை, நாடகம் முதலான கற்பனைப் படைப்புகளில் அந்த நடை அறவே ஒதுக்கப்பட்டுவிட்டது எனலாம்.

திரு. வி. க.

திரு. வி. கலியாணசுந்தரர் (1883 - 1953) தமிழாசிரியராக இருந்து, பத்திரிகை ஆசிரியராகப் புகழ்பெற்று, அரசியல் தலைவராய் விளங்கி, தொழிலாளர் தலைவராகச் சிறப்புற்று, தமிழறிஞராய், எழுத்தாளர்க்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்தவர். அவருடைய இளமையில் 1908-இல் பழைய மரபை ஒட்டிப் பெரிய புராணத்திற்கு ஒரு குறிப்புரை எழுதினார். அவ்வாறே வேறு சிறு சிறு நூல்களும் இயற்றினார். ‘தேச பக்தன்’ என்ற நாளிதழ் ஆசிரியராகவும் ‘நவசக்தி’ என்ற வார இதழ் ஆசிரியராகவும் அவர் பெற்ற அனுபவமும், பல அரசியல் சமுதாய சமயக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பேசியும் தலைமை தாங்கியும் பெற்ற அனுபவமும் பலதுறைப் பேரறிஞர்களோடு பழகிப் பெற்ற அனுபவமும், அவருடைய எழுத்தில் அறிவுமுதிர்ச்சியையும் தெளிவையும் பண்பாட்டையும் அமைத்துவிட்டன. 1917-இல் அவர் எழுதிய ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்ற நூலில் அந்தத் தெளிவையும் முதிர்ச்சியையும் காணலாம். ‘முருகன் அல்லது அழகு’ தமிழ் இலக்கியத்தில் தோய்ந்து பண்பட்ட உள்ளத்தைப் புலப்படுத்துவது. ‘பெண்ணின் பெருமை’ பெண்களுக்கு இதுவரை நாட்டில் இல்லாத பெருமையைத் தேடித்தரும் வகையில் எழுதப்பட்ட நூல். இவைபோல் அவரால் எழுதப்பட்ட உரைநூல்கள் பலவற்றிலும் அவருடைய நடையின் மிடுக்கையும் இனிமையையும் காணலாம். இந்த நூல்கள் எல்லாவற்றிலும் காணப்படும் தமிழ்நடையின் அழகைவிட, பண்பட்ட கருத்தின் உயர்வே மிகப் போற்றத்தக்கது எனலாம். விருப்புவெறுப்பும் வீண் ஆரவாரமும் பிடிவாதமும் ஒருதலைச் சார்பும் வெறியுணர்ச்சியும் அழிவுமனப்பான்மையும் நிரம்பிய எழுத்துகளிடையே, ஒரு பண்பட்ட சான்றோர் நடுநிலை தவறாமல் உயர்நெறியை விடாமல் போற்றிப் பண்பாட்டின் வரம்புக்குள் நின்று