அருளுணர்வோடு
பல நூல்கள் எழுதியளித்தது, தமிழிலக்கிய உலகிற்கு ஒரு நல்ல பேறு என்று சொல்லத்தக்க
வகையில் அமைந்தது. அவருடைய உரைநடை நூல்களில் சில, அவ்வப்போது மேடையில் பேசிய
பேச்சையே வடித்துக் கொடுக்கப்பட்டவை ஆகும். ‘தமிழ்த் தென்றல்’ முதலான
அத்தகைய நூல்களைச் சொற்பொழிவு இலக்கியம் என்று கூறலாம். தமிழுக்கு அவை புதுமையான
வழிகாட்டிகள். அடுத்து, இதழ்களில் அவ்வப்போது எழுதிய தலையங்கங்களைத் தொகுத்துத்
தரும் ‘தமிழ்ச்சோலை’ முதலிய நூல்கள் உள்ளன. அவற்றைத் தலையங்க இலக்கியம்
எனக் கூறலாம். அவையும் தமிழுக்குப் புதுமையாக அமைந்தவைகளே. கணக்கற்ற நூல்களுக்கு நீண்ட
முன்னுரைகள் எழுதியவர் அவர். அவைகள் எல்லாம் இலக்கியமாக வாழத் தக்க எழுத்துகள்.
‘மேடைத் தமிழ்’ என்று சொற்பொழிவுக் கலைபற்றி ஒருவர் ஒரு நூல் எழுதினார்.
அதற்கு முன்னுரை அளித்த திரு. வி. கலியாணசுந்தரர் எதிர்பாரா வகையில் ஒரு புதுமையைப்
புகுத்தினார். அந்த நூல் அவரை மேடைக்கே கொண்டுசென்று, சொற்பொழிவாளராகக் கற்பனை
செய்வித்தது. “தோழர்களே! உங்கள் முன்னிலையில் யான் நிற்கிறேன். ஏன்
நிற்கிறேன், தெரியுமா? மேடைத் தமிழ் என்னும் நூலுக்கு அணிந்துரை கூறப் போகிறேன்”
என்று முன்னுரை தொடங்கினார். இவ்வாறு பழந் தமிழ்ப் புலவர் மரபில் வந்த அவர் செய்த
புதுமைப் புரட்சிகள் பல.
1942 முதல் அவர் பல செய்யுள் நூல்கள் இயற்றினார். ‘அருள் வேட்டல்’ என்ற
பெயரால் பழைய ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்களையும் அருட்பாவையும் பின்பற்றிச்
சில நூல்கள் இயற்றினார். திருமால் அருள்வேட்டல், முருகன் அருள்வேட்டல், சிவனருள்வேட்டல்,
கிறிஸ்துவின் அருள்வேட்டல் என்பவை அத்தகையவை. புதுமைவேட்டல், பொதுமைவேட்டல் முதலானவை,
புதிய பொதுவுடைமைக் கொள்கையையும் சாதி முதலிய வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தையும்
வரவேற்கும் நெஞ்சத்தைக் காட்டுவன. புதுமையை வரவேற்கும் நெஞ்சின் அடிப்படையில் பழமையில்
நல்லவற்றைப் போற்றும் மனப்பாங்கும், யந்திர நாகரிக வேகத்தை வெறுத்து இயற்கையின்
அமைதியைப் போற்றும் இயல்பும் காணலாம். பதினைந்து செய்யுள்நூல்கள் அவர் இயற்றியவை.
அவற்றின் யாப்பு அமைப்பில் புதுமை ஒன்றும் இல்லை; எல்லாம் பழைய செய்யுள் வடிவங்களே.
ஆனால் கருத்திலும் உணர்ச்சியிலும் பழமை குறைவு, புதுமையே மிகுதி எனலாம். அவருடைய வாழ்வில்
நிறைந்திருந்த எளிமை தூய்மை பொதுமை ஆகிய உயர்ந்த பண்புகள், அவர் இயற்றிய உரைநடை
நூல்களிலும் விளங்கின; அவற்றைவிடச் சிறப்பாக, செய்யுள் நூல்களில் நன்கு
|