பக்கம் எண்: - 330 -

விளங்கின என்று கூறுவது பொருந்தும். ஆனால் அவைகள் எல்லாம் கவிதைச் சிறப்பு உடையவை என்று கூறல் இயலாது; அவற்றுள் உணர்ச்சி வளமும் கற்பனை நயமும் உடைய பாடல்கள் பல உள்ளன. அவை சான்றோர்களின் செம்மொழிகள் போல், பண்பாட்டின் சாரமாக விளங்கும் சிறந்த எழுத்துகள் ஆகும்.

மற்ற அறிஞர்கள்

தமிழ் இலக்கியத்தில் வரலாற்றை ஆராய்ந்து நூல்கள் எழுதியவர்கள் பலர். அறிஞர்கள் கே. சீநிவாச பிள்ளை, கா. சுப்பிரமணிய பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ஆகியோரின் நூல்கள் இவ்வகையில் பலர்க்கும் பயன்படுவனவாக உள்ளன. சதாசிவ பண்டாரத்தார் கல்வெட்டுகளை ஆராய்ந்து, வரலாற்றில் தெளிவு கண்டு, அவற்றைத் தமிழ் இலக்கிய வரலாற்றிற்குப் பயன்படுத்தி நூல்கள் எழுதியுள்ளார். ‘இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுகளும்’ என்னும் அவருடைய நூல் பாராட்டத்தக்கது. ‘கிறிஸ்தவமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’, ‘பௌத்தமும் தமிழும்’ முதலான நூல்கள் மயிலை சீனி வேங்கடசாமி இயற்றியவை. ஒழுங்காகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் அவருடையவை. சங்க கால அரசர்களைப்பற்றியும் புலவர்களைப் பற்றியும் பல தொகுதிகளாக நூல்கள் இயற்றியுள்ளார் புலவர் கோவிந்தன்.

ஆராய்ச்சி நூல்கள் எழுதித் தமிழ் உரைநடையில் நுட்பமும் தெளிவும் எளிமையும் சேர்ந்து வளர உதவியவர்கள் மா. இராசமாணிக்கம், சாமி சிதம்பரனார், மு. அருணாசலம், மு. வரதராசன், வெள்ளைவாரணர். அ. மு. பரமசிவானந்தம், வேங்கடராம செட்டியார் முதலியவர்கள். உரையாசிரியர்களின் நடையைப் பின்பற்றியவர்கள் துரை அரங்கசாமி, கா. அப்பாத்துரை, வ. சுப. மாணிக்கம், இராமநாதன் செட்டியார் முதலானோர்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் ‘கானல் வரி’ புது வகையான ஆராய்ச்சி நூல். சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தைக் ‘கானல் வரி’ என்னும் பகுதியை மையமாய் இயக்கிச் செல்வது என்னும்  தம் கொள்கையை அதில் நிலைநாட்டுகிறார். மார்க்கபந்து சர்மாவின் ‘சிலம்பின் பாயிரம்’, ‘சிலம்பும் மேகலையும்’ முதலியனவும் தமிழின் பழைய காப்பியம்பற்றிய தேர்ந்த ஆராய்ச்சி நூல்கள். காலமெல்லாம் இளங்கோவின் புகழ் பரப்பி முழங்கிச் சிலம்புச் செல்வர் என்று புகழ்பெற்ற ம. பொ. சிவஞானமும், மு. வரதராசன், வ. சுப. மாணிக்கம், போ. குருசாமி, ந. சஞ்சீவி, கு. திருமேனி முதலானவர்களும் அந்தக் காப்பியம்பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல்கள் எழுதியுள்ளனர்.