பக்கம் எண்: - 336 -

18. இக்காலப் பாட்டிலக்கியம்

பாரதியார்

சென்ற நூற்றாண்டிலும் பழமையான உலா, மடல், அந்தாதி முதலிய செய்யுள்களைப் பாடிச் செல்வர்களைப் புகழ்ந்து பொருள் பெற்று வாழ்வதில் புலவர் சிலர் காலம் கழித்தனர். சிலேடை யமகச் சொல்லணிகளும் இரட்டை நாகபந்தம் முதலான சித்திர கவிகளும் பாடி, உள்ளத்து உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் இடமில்லாமல் வெறுஞ்சொற்களின் இன்பத்திலும் எழுத்துகளை அமைத்து அழகு பார்க்கும் சிறு விளையாட்டிலும் அக்கறை கொண்ட பகுதி அது. பெண்களின் உடலுறுப்புகளை வருணிப்பதின் வாயிலாகவும் காமச் செயல்களைக் கூறுவதன் வாயிலாகவும் கேட்பவர்களின் சிறு சிறு இச்சைகளைத் தூண்டி மகிழ்விப்பதில் பொழுதுபோக்கிய காலம் அது. இராமலிங்க சுவாமிகள், வேதநாயகம் பிள்ளை முதலான உண்மைக் கலைச்செல்வர்களும் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து தொண்டாற்றினார்கள். ஆயினும் அவர்கள் விரல்விட்டு எண்ணத் தக்க சிறுபான்மையோரே. கி. பி. 1882இல் பிறந்து அத்தகைய குழுவில் வளர்ந்த பாரதியார் தொடக்கத்தில் செல்வரைப் பாடும் முயற்சிகளில் மனத்தைச் செலுத்த முயன்றிருக்கலாம். மனிதரைப் புகழ்ந்து பாடித் திரியும் வாழ்வின் சிறுமையைப் பழித்துப் பாரதியார் ஒரு பாட்டு எழுதியிருந்தார். அதைக் கண்ட ஜமீன்தார் அவரிடம் வெறுப்புக்கொண்டார். பாரதியார் உடனே அவரைவிட்டு வெளியேறினார். அவருடைய சுதந்தர வேட்கையும், உண்மைப் புலமையும், சூழ்ந்துள்ள மக்களின் துன்பம் துடைக்கத் தொண்டு செய்யவேண்டும் என்ற ஆர்வமும், அவரை அந்தப் பழமைப்போக்கில் தேங்கவிடவில்லை. அவற்றைக் கடந்து வளருமாறு செய்தது, முதலில் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடே ஆகும். தேசீய உணர்ச்சிக்கு ஊக்கம் ஊட்டும் வகையில் அவருக்கு வ. வே. சு. ஐயர், வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் நட்பும் திலகரின் தொடர்பும் அமைந்தன. அந்தத் தீவிர உணர்ச்சியோடு சென்னைக் கடற்கரையில் அவர் பல பாடல்களைப் பாடி முழங்கினார். பாடல்கள் அச்சடித்துப் பரப்பப்பட்டன. தீப்பற்றுவது போல் அவை நாடு முழுதும் பரவிச் சின்ன நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மக்களைத் தட்டி எழுப்பின. அந்தத் தேசீயப் பாடல்களே பாரதியாரை நாட்டுக்கு அறிமுகம் ஆக்கியவை. அவர் மறையும் காலம் (1921) வரையில் அவற்றாலேயே அவர் நாடறிந்தவராக விளங்கினார்.