பக்கம் எண்: - 357 -

            வெயிற்கு ஏற்ற நிழல்உண்டு
                வீசும் தென்றல் காற்றுஉண்டு
           கையில் கம்பன் கவிஉண்டு
                கலசம் நிறைய மது உண்டு

           தெய்வ கீதம் பலஉண்டு
                தெரிந்து பாட நீயும்உண்டு
           வையம் தரும்இவ் வளம்அன்றி
                வாழும் சொர்க்கம் வேறுஉண்டோ?

அதனால் அப்பாடல்களைப் படிக்கும்போது, மொழிபெயர்ப்பு, தழுவல் என்ற எண்ணங்களே தோன்றாமல் தமிழ்நாட்டுச் சிறந்த கவிதைகளைப் பாடி இன்புறுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

இவ்வாறே வேறு சில ஆங்கிலப் பாடல்களையும் தழுவி அழகான தமிழ்க் கவிதைகளாகத் தந்துள்ளார்.

பாரதியார்போல் இவரும் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் சில நாட்டுப்பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்திப் பாடல்கள் இயற்றியுள்ளார். ‘ஆண்டிப்பண்டாரம் - உனை வேண்டிக் கொண்டேனே’ என்பது ஒரு நாட்டுப்பாடல். அதை ஒட்டி, ‘தீண்டாதோர் விண்ணப்பம்’ என்ற பாடலைப் பாடினார். ‘நினைப்பது எப்போது நெஞ்சே’ என்ற மெட்டிலும் தீண்டாமைபற்றி வருந்திப் பாடினார். ஆனந்தக்களிப்பு என்ற வடிவிலும் பாடல் இயற்றினார்.

இவருடைய உள்ளத்தில் கவிஞர் பாரதியார்க்குத் தனியிடம் உண்டு. கிராமத்தான் ஒருவன் நகரத்துக்குப் போனதாகவும், அங்கே யாரோ பாரதியின் பாடல்களைப் பாடக் கேட்டு வியந்ததாகவும், பிறகு தன் கிராமத்துக்குத் திரும்பி வந்தபோது அக்கம்பக்கத்தார்க்குப் பாரதியின் பாடல்களின் பெருமைகளை எடுத்துப் பேசியதாகவும் கற்பனை செய்து ஆர்வம் நிரம்பிய பாடலைப் பாடியிருக்கிறார்:

            பாட்டுக்கு ஒருபுலவன் பாரதிஅடா - அவன்
                பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினான்அடா
           கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேஅடா - அந்தக்
                கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய்அடா.

           சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேஅடா - கவி
                துள்ளும் மறியைப்போல துள்ளுமேஅடா
           கல்லும் கனிந்துகவி ஆகுமேஅடா - பசுங்
                கன்றும்பால் உண்டிடாது கேட்குமேஅடா.