பாவேந்தர் முதலில் தாம் ஒரு தமிழர் என்பதை என்றும்
மறவாதவர்.தமிழுர்களும் அதை மறவாது இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியவர்.அடுத்து அவர் பிரஞ்சு இந்தியாவில்
வாழ்ந்ததால்,அங்கு நிலவிய உரிமைகளும் சமத்துவமும் சாதிமத பேதமற்ற ஒற்றுமையும் இன்னபிறவும் அவரது குருதியில் கலந்துவிட்டவை.
அவற்றை என்றும் மறவாதவர். மேலும் அவர் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ளவர்களோடு ஒட்டி உறவாடி அவர்களது இன்பத் துன்பத்தில் பங்கேற்றவர். உற்ற
உதவி செய்து உறு பசி தீர்த்தவர். அவரது அடங்காத் தமிழ்ப்பற்றும், தமிழ் இலக்கியத்துள் பொதிந்துகிடக்கும் விழுமிய கருத்துக்களும் அவரைக் குறுகிய
நோக்கமுள்ளவராக ஆக்காமல், பரந்துபட்ட பார்வை கொண்டவராகவும் காணச் செய்தது. ஆகவேதான் சிறுநாடுகளைப் பெரிய வல்லரசுகள் சுரண்டிப் பிழைப்பது கட்டோடு
பிடிக்கவில்லை. அவர் சர்வாதிகாரி இட்லரைச் சாடியுள்ளார். அமெரிக்க ஆதிக்கத்தை வெறுக்கிறார். பொதுவுடைமையை வரவேற்கிறார்.
அவரது ‘குயில்’ நாளேட்டில் அன்றாடப் பிரச்சனைகள் அலசி ஆராயப்படுகின்றன. கொடுமையாளர்களை, கையாலாகாதவர்களை இனங்காட்டி கடுஞ் சொற்களால்
காய்கிறார். மக்களை - உண்மைகளைத் தெரிந்து கொண்டு பொய்மைகளைக் களையப் போராட வேண்டுமென்கிறார். கிழமை இதழில் தமிழின் சிறப்பை
விளக்குகிறார். வேர்ச் சொற்களை விளக்கிக் காட்டுகிறார். இளங்கவிஞர்களுக்கு நல்ல கவிதை இயற்றுவதற்குச் சொல்லாராய்ச்சி, தொன்மை ஆராய்ச்சி
போன்ற இலக்கண விளக்கங்களைத் தொடர்ந்து நடத்தியுள்ளார். திங்கள் இருமுறை இதழ்களில் தமிழிலக்கணம், வெல்க தமிழகம் போன்ற ஆசிரியர் கட்டுரை
மூலம் அறிவுரை கூறுகிறார். துணைத் தலையங்கங்களில் பொன்னான புதுவை தன்னையேதான் நம்ப வேண்டும், தமிழகப் புலவர் குழு பற்றியும் எழுதியுள்ளார்.
அவருடைய எழுத்தில் உணர்ச்சி உண்டு; கிளர்ச்சி உண்டு. கடுஞ்சொல் உண்டு. பாராட்டும் உண்டு. கலையுணர்ச்சி மிளிரும் பகுதி உண்டு. வரலாறு உண்டு. பல அரிய
தகவல்கள் பொதிந்து கிடக்கும் இடங்களும் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும், எவ்வளவு உதவி செய்தவர்களானாலும் அவரவர் செய்யும் அடாச் செயல்களை அத்தருணமே
அஞ்சாது கண்டிக்கும் ஆண்மை பாரதிதாசனிடம் நிரம்ப காணப்படுகிறது. சில சமயம் நன்றி மறந்து தூற்றல் பாணமும் தொடுக்கப்படுவதைக் காண்கிறோம்.
மனிதராகப் பிறந்த எவரிடத்தும் போற்றும் பண்புகளும் உண்டு. குறைகூறும் பண்புகளும் விரவிக் காணப்படும். என்றாலும் மேலோங்கி நிற்கும் குணங்களையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
|