மறைக்கப்பட்ட தமிழின
வரலாற்றையும், சிதைக்கப்பட்ட ஒப்புயர்வற்ற மொழியையும், தமிழின் தொன்மையையும்,
அதன் செம்மாப்பினையும், தமிழர்களின் பெருமையையும் உலகறியச் செய்தவர் தொல்தமிழ்
அறிஞர், மொழிநூல் வல்லுநர் பாவாணர் ஆவார். இவர் தமிழ்மொழி ஆய்விலேயே
ஐம்பது ஆண்டுகள் மூழ்கித் திளைத்தவர். இப்படிப்பட்ட பேரறிஞர் ஒருவரைத் தமிழகம்
இதுநாள்வரை கண்டதில்லை. தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைலையடிகளுக்குப் பிறகு
தனித்தமிழ் இயக்கத்தை மரமாக வளர்த்தெடுத்துப் பலருக்கு நிழல் தந்தவர் பைந்தமிழறிஞர்
பாவாணர் ஆவார். இவர் இலக்கண இலக்கியப் புலமையும், மொழிநூல் புலமையும், வரலாற்று
அறிவும், நிலநூல், உயிர்நூல், மாந்தனூல் தேர்ச்சியும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற
நுண்ணறிவாளர். தமிழின்பால் எல்லையற்ற அன்பும் தமிழைப் பண்டுபோல்
புதுமொழியாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்ற உணர்வுமுடையவர். தமிழர்கள் தங்கள்
வாழ்வு நலன்களைத் தேடி முன்னேறுவதற்குத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். |