பைந்தமிழ் இலக்கியத்தில் ‘பட்டினப்பாலை’க்குத் தனித்த சிறப்புண்டு.
இதை இயற்றிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்கு, பாட்டுடைத் தலைவன்
கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசாக அளித்தான். மேலும், பாடல்
அரங்கேறிய பதினாறு கால் மண்டபத்தையும் புலவர்க்கே பரிசாக
அளித்துவிட்டான்; இத்தகைய சிறப்பினை எந்தக் காவலனும் செய்ததில்லை;
கண்ணனார் தவிர வேறு பாவலனும் பெற்றதில்லை.
பட்டினப்பாலைப் பரிசில் மண்டபம் அதன் பின்னர் ஆயிரம்
ஆண்டுக்குமேல் தலைநிமிர்ந்து நின்று கண்ணனார் கரிகாலன் பெருமையைப்
பாறை சாற்றியது. மூன்றாம் இராசராசன் சோழநாட்டிலும் மாறவர்மன் சுந்தர
பாண்டியன் பாண்டி நாட்டிலும் ஆண்டுவந்த காலத்தில் பரிசில்
மண்டபத்தின் புகழ்மேலும் பெருகியது. அதைத் திருவெள்ளறைக்
கல்வெட்டுக் கூறுகிறது. அக்கல்வெட்டை அடிக்கல்லாகக் கொண்டு
கட்டப்பட்டதே இந்த நாடக மாளிகை.
இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், குருகுலத்தரையன்,
காங்கேயன், மழவர் மாணிக்கம், காரணை விழுப்பரையர்,
புவனமுழுதுடையாள் ஆகியோர் வரலாற்று மாந்தர்கள். பிறர் கற்பனை
மாந்தர். இவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடகம் தமிழ்
இலக்கியத்தின் பெருமையை, தமிழரின் மொழிப்பற்றை, தமிழ் மன்னர்
புலவரைப் போற்றிய தகைமையை வெளிப்படுத்தும்.
இந் நாடகம் எழுதத் தூண்டுகோலாய் விளங்கி ஊக்குவித்த என்
அருமை நண்பர் டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்,
நாடகத்தை வெளியிடும் நறுமலர்ப் பதிப்பகத்தார்க்கும் என் நன்றி,
|