முகப்பு | தொடக்கம் |
v |
விரிவு நிகண்டு, அபிதானந் தனிச்செய்யுள் நிகண்டு , நாநார்த்த தீபிகை என்னும் நூல்கள் விருத்த வகைகளினால் அமைந்தன * .
நிகண்டுகளும் அகராதிகளும்: நிகண்டுகள் மனப்பாடம்செய்து போற்றுவதற்காகவே அமைந்தவை. எனவேதான், அவையெல்லாம் பல்வேறு வகையான பாடல்களில் அமைக்கப்பெற்றன. இவற்றில் ஒரு சொல்லின் பொருளை அறியப் பாடல்களின் சொற்பொருள்களும் நன்கு உணரப்படவேண்டும். சொற்பொருளை மட்டுமல்லாது பாடல்களில் ஓசை நிரப்புவதற்காகச் சேர்த்த அடைமொழிகள் அசைச்சொற்கள் முதலியனவும் இடைப்பிறவரல்போன்று தடையாய் நிற்கும் . மனப்பாடம் செய்யும் பழக்கம் குறைந்துவரவே நிகண்டுகளைக் கற்றுப்போற்றுவதும் குறைந்துபோயிற்று . நிகண்டுகளில் தெய்வப்பெயர் , மக்கட்பெயர் முதலியவாகப் பல்வேறு தொகுதிகளில் சொற்பொருள்கள் விரவிக் கிடக்கின்றன . ஆதலால், ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டுமாயின் அச் சொல் எந்தத் தொகுதியைச் சேர்ந்தது என்பது தெரியவேண்டும் . அவ்வாறு தெரிந்த பின்னும் குறிப்பிட்ட தொகுதியிலுள்ள பாடல்களையெல்லாம் துருவிப்பார்த்தே அச் சொல்லைக் காணவேண்டும் . நிகண்டு மனப்பாடம் இல்லாவிடின் குறித்த ஒரு சொல்லையோ பொருளையோ அத்துணை எளிதில் கண்டுகொள்ள இயலாது . இத்தகு பெருமுயற்சி நிகண்டுவழிச் சொற்பொருள் காண்பதற்கு வேண்டியிருக்கிறது . அகராதியோ அப்படியன்று . ஒவ்வொரு சொல்லும் அ , ஆ முதலிய நெடுங்கணக்கு வரிசையிலேயே அமைக்கப்பட்டிருக்கும் . எனவே , எழுத்துநிரல் தெரிந்தார் அகராதிகளில் சொற்பொருள்களை எளிதில் கண்டு கொள்ளலாம் . எனவேதான் , நிகண்டுகள் இருக்கவும் அகரமுதலிகள் சிறியவும் பெரியவுமாய்ப் பல தோன்றலாயின. முதல் உரைநடை அகரமுதலி: முதன்முதலாக உரைநடையில் சொற்பொருள் விளக்கங்களைக்கொண்டு தோன்றிய அகரமுதலி சதுரகராதி . இதனை ஆக்கியவர் இத்தாலி தேசத்திலிருந்து கிறித்தவ சமயம் பரப்பத் தமிழ்நாட்டுக்கு வந்த பெஸ்கி பாதிரியாராவார் . இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபின் தமிழைத் தக்க புலவர் துணையுடன் கற்றுப் பெரும்புலவராய்ச் செய்யுளிலும் உரைநடையிலும் தம் சமயச்சார்பான பல நூல்களை இயற்றினார் . மேலைநாட்டிலிருந்து இங்கு வரும் பாதிரிமார்களுக்கு நல்ல தமிழ்நடையையும் பேச்சுவழக்கு முறையினையும் அறிவுறுத்த முறையே செந்தமிழ் , கொடுந்தமிழ் என்னும் நூல்களை ஆக்கியுள்ளார் . பிறமொழியாளர் தமிழ் கற்கும் வகையில் தமிழ்-இலத்தீன் அகராதி , தமிழ்-போர்ச்சுகீசு அகராதிகளையும் தொகுத்து அமைத்தார். தேம்பாவணிக் காவியத்தையும், திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும் , தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலையும் தமிழில் படைத்தளித்தார் . உரைநடை நூல்கள் மிகுதியாயில்லாத அந் நாளில் கிறித்தவ சமய விளக்கமான பல நூல்களையும் படைத்துள்ளார். ' அவிவேக பூரண குரு கதை ' என்னும் நகைச்சுவை நிரம்பிய கதைநூலையும் தந்துள்ளார் . இதிலுள்ள கதைகள் இளைஞரும் முதியரும் கற்று இன்புறுதற்குரியன . இவ்வாறாகத் தமிழுக்குப் பலவகையான ஆக்கப்பணிகள் புரிந்துவந்த பெஸ்கி பாதிரியார் தமிழ் - தமிழ் அகரமுதலி ஒன்றையும் படைத்தளித்துள்ளார் . நிகண்டுகளிலே செய்யுள் வடிவில் அமைந்திருந்த சொற்பொருள் விளக்கங்களை உரைநடையில் மாற்றி அகராதியாக 1732ஆம் ஆண்டு அமைத்தார். திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ள இவர், தாம் தொகுத்து முறைப்படுத்திய அகராதிக்குச் ' சதுரகராதி ' எனப் பெயரிட்டார் . * இங்குச் சுட்டிய நிகண்டுகளின் விரிவான வரலாற்றை யான் எழுதிய ' நிகண்டுச் சொற்பொருட்கோவை - தெய்வப்பெயர் ' என்னும் நூலினுள் காணலாம் . மதுரைக் காமராசர் பல்கலைக்கழக வெளியீடு - 1982 . |
![]() |
![]() |
![]() |