முகப்புதொடக்கம்

vi


சதுரகராதி:

சதுரகராதி என்றால் நான்கு வகையான அகராதிகள் அடங்கிய தொகுதி என்பது பொருள் . முதலாவது உள்ளது பெயரகராதி . இதில் ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் தரப்பட்டுள்ளன . இரண்டாவது பொருளகராதி . இதில் தெய்வப் பெயர் , மக்கட்பெயர் முதலிய பொருட்பெயர்களை அகரநிரலில் வைத்து அவ்வப் பொருட்கு உரிய பல பெயர்களும் அகரநிரலில் சுட்டப்பட்டுள்ளன . மூன்றாவதாகத் தொகையகராதியில் இருசுடர் , முக்குணம் என்றாற் போல எண்தொகையாய் வரும் பொருள்களுக்குரிய விளக்கங்கள் அகரநிரலில் அமையக் காணலாம் .

நான்காவதான தொடையகராதியில் செய்யுள்களில் வரும் எதுகைத் தொடர்களை அகரநிரலில் தருகின்றார் . இதில் குறிற்கீழெதுகை , நெடிற்கீழெதுகை என இருபகுதி உண்டு . இவற்றில் படித்தல் , பிடித்தல் , பொடித்தல் , வடித்தல் , முடித்தல் என்றாற்போலவும் ஊராண்மை , ஏராண்மை , பேராண்மை என்றாற்போலவும் சொற்களை அமைத்துப் பொருளும் சுட்டியுள்ளார் . இப் பகுதி சூடாமணி நிகண்டில் ககர எதுகை முதல் னகர எதுகை வரையிலும் சொற்களை எதுகையடைவில் கோத்துப் பொருள் விளக்கிய பான்மையில் உள்ளது .

இந்தச் சதுரகராதி 18 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டபோதிலும் முழுமையாய் அச்சில் வந்தது 19ஆம் நூற்றாண்டில் 1824 ஆம் ஆண்டிலேயே ஆகும் . இந்த அகராதிக்குக் காலந்தோறும் பல பதிப்புகள் - பத்துப் பதிப்புகளுக்கு மேல் - வந்துள்ளன . பின்னால் வளர்ந்து பெருகிய தமிழ் - தமிழ் அகரமுதலிகளுக்கு எல்லாம் மூலநூலாய் விளங்குவது சதுரகராதியே .

மானிப்பாய் அகராதி:

சதுரகராதிக்கு அடித்துவைத்துப் போற்றத்தக்க பேரகராதி , 1842 ஆம் ஆண்டில் வெளிவந்த ' யாழ்ப்பாணத்து அகராதி ' என்றும் ' மானிப்பாய் அகராதி ' என்றும் சொல்லப்பெறும் அகராதியாகும் . இதனைத் தொகுத்து அளித்தவர் சந்திரசேகர பண்டிதராவார். இவர் தம் அகராதிக்குப் 'பெயரகராதி' என்றே பெயர் சூட்டினார் . ஏனென்றால் , இது சதுரகராதியின் முதல் அகராதியாகிய பெயரகராதியின் விரிவேயாகும் . இந்த அகராதி யாழ்ப்பாணத்துக்குச் சேர்ந்த மானிப்பாய் அமெரிக்க மிசியோன் அச்சுக்கூடத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்ட காரணத்தால்தான் ஊர்ப்பெயரை முன்னிட்டு முன்னர்ச் சுட்டியவாறு இந்த அகராதியை வழங்கலாயினர் .

இதில் சதுரகராதி முழுமையிலும் இடம்பெற்ற சொற்களைவிட நான்கு மடங்குச் சொற்கள் - 58,500 சொற்கள் - அடங்கியுள்ளன . எனவே , இஃது ஒரு பெரிய அகராதியேயாகும் . இதில் பொருள் , தொகை , தொடை அகராதிகள் இல்லை . ஆயினும் , பின்னர் அச்சிட்டோர் சதுரகராதியில் உள்ளபடி அவற்றையும் அச்சிட்டுச் சேர்த்து இணைப்பாராயினர் . பின்னர் வந்த தமிழ் - தமிழ் அகரமுதலிகள் பெயரகராதியை விரிவுபடுத்தியபோதிலும் ஏனைய மூன்று பகுதிகளையும் விரிவுபடுத்தாது சதுரகராதியுற் கண்டபடியே உடன்சேர்த்துத் தருவாராயினர் .

பின்வந்த தமிழ் தமிழ் அகரமுதலிகள்:

பின்வந்த தமிழ்-தமிழ் அகரமுதலிகள் எல்லாம் மானிப்பாய் அகராதியின் விரிவேயாகும் . மானிப்பாய் அகராதிக்குக் களத்தூர் சாமி வேதகிரி முதலியார் ஓர் அனுபந்த அகராதியைச் சேர்த்தார் . இதில் ஏறத்தாழ 6,500 சொற்கள் காணப்படுகின்றன . இதன்பின் காஞ்சிபுரம் - இராமசாமி நாயுடு மானிப்பாய் அகராதியுடன் வேதகிரி முதலியாரின் அனுபந்த அகராதியையும் சேர்த்து விரிவுபடுத்தினார் ; தாமும் பற்பல புதுச் சொற்களை உடன் சேர்த்தார் . இவர் தொகுத்த அகரமுதலி ' பேரகராதி ' என்னும் பெயருடன் 1893 ஆம் ஆண்டுக்குள் இருபதிப்புகளைப் பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி வித்துவான் நா.கதிரைவேற்பிள்ளை என்பார் 1899-ல் ' தமிழ்ப் பேரகராதி ' என்னும் பெருந்தொகுப்பினைக் கொண்டுவந்தார் . இது இராமசாமி நாயுடுவின் பேரகராதியின் விரிவு . இவர் முந்திய அகராதிகளில் இடம் பெறாத பல நூல்களிலிருந்து தெரிந்தெடுத்த புதுச் சொற்களுக்கு உடுக்குறி (*) இட்டுக் காட்டியுள்ளார் .