முகப்புதொடக்கம்

vii


இதனை மேலும் புதுக்கித் தமிழ்ப் பேரகராதியை 1901-ல் இவர் மீண்டும் வெளியிட்டார் . 1905-ல் இரண்டாம் பதிப்பும் வந்துள்ளது .

தமிழ்மொழி யகராதி:

தமிழ்ப் பேரகராதியை 1901-ல் வெளியிட்ட பி. வே. நமசிவாய முதலியார் காஞ்சி நாகலிங்க முதலியாரைக்கொண்டு மேலும் பல சொற்களை இணைத்துத் திருத்தியும் விளக்கியும் பேரகராதியை வளப்படுத்தினார் . 1911-ல் வெளிவந்த இந்த அகராதிக்கு நாகலிங்க முதலியாரின் விருப்பப்படி ' தமிழ்மொழியகராதி ' எனப் பெயரை மாற்றினார் . மேன்மைதங்கிய ஐந்தாம் சார்ச்சு மன்னரும் மேரி அரசியாரும் அந்த ஆண்டு தில்லியில் முடிசூடிக்கொண்ட நிகழ்ச்சியை நினைவுகூரும் வண்ணம் ' காரனேசன் தமிழ் டிக்சனரி ' என்னும் பெயரிட்டார் . இந்த அகராதிக்கு வரவேற்பு மிகுதியும் இருந்தது . எனவே , இது மேலும் பல பதிப்புகளை அடுத்தடுத்துப் பெற்றது . இதன் ஏழாம் பதிப்பு 1935-ல் வெளிவந்ததாகத் தெரியவருகிறது . இதன் ஆறாம் பதிப்பை அப்படியே நிழற்படம் எடுத்து மறுதோன்றிப் பதிப்பாகத் தில்லி , ஆசியன் பதிப்பகத்தார் நான்காண்டுகளுக்கு முன் (1980) வெளியிட்டுள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி:

பி. இராமநாதன் என்பார் புலவர் சிலர் துணையுடன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி என்னும் பெயரிலே 1909-ல் இருபகுதிகள் கொண்டபேரகராதியை வெளியிட்டுள்ளார். இது நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி முதலிய முந்திய அகராதிகளில் இடம்பெறாத 10,000 சொற்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. சதுரகராதிக்குப் பின்னர் வந்த தமிழ் - தமிழ் அகரமுதலிகளில் நா. கதிரைவேற்பிள்ளை அகராதி வரையில் சதுரகராதியில் உள்ளபடி பொருள்,
தொகை, தொடை அகராதி ஆகியவற்றையும் சேர்த்து வந்தனர் . இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதியிலும் மேற்படி மூவகைச் சேர்க்கைகள் உண்டு. ஆயினும், இவர் சதுரகராதி தந்தவற்றைக் காட்டிலும் அதிகமான சொற்களை உடன்சேர்த்து விளக்கப் பகுதிகளிலும் பல மாறுதல்களைச் செய்துள்ளார். அன்றியும் பொருள்விளக்கும் முறையிலும் தெளிவு காணப்படுகிறது. அங்கங்கே பொருள்விளக்கமான சிறிய படங்களையும் உடன் சேர்த்திருப்பது இந்த அகராதிக்குரிய தனிச் சிறப்பாகும்.

தமிழ்ச்சங்க அகராதி:

தமிழ் - தமிழ் அகரமுதலிகளுள் மிகவும் பெரியது தமிழ்ச்சங்க அகராதி . இது மூன்று பெருந்தொகுதிகளாக வெளிவந்தள்ளது . சொற்பொருள் விளக்கம் தவிரப் பொருள் , தொகை , தொடை அகராதி என்னும் சேர்க்கை இந்த அகராதியில் இல்லை . இந்த அகராதியைப் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கியவர் யாழ்ப்பாணம் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளையாவார் . இவர் சதுரகராதி , மானிப்பாய் அகராதி , சென்னை அகராதிகள் , வின்சுலோ அகராதி , வைத்திய அகராதி என்னும் இவற்றில் இல்லாத புதுச் சொற்களைத் திரட்டி விளக்கம் தந்துள்ளார் . இதனை முற்றுமாய் வெளியிடும் முன்னர் இவர் காலமானார் .

பின்னர் அப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராக விளங்கிய பொன் . பாண்டித்துரைத் தேவரவர்கள் அகராதிப் படிவங்களைக் கதிரைவேற்பிள்ளையின் குமாரர் பாலசிங்கம் என்பவரிடமிருந்து பெற்றார் ; மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிட்டு வெளியிடப் பணித்தார் . சே.ரா . சுப்பிரமணியக் கவிராயர் முதலிய பலரும் பல்லாண்டுகள் உழைத்து இந்த அகராதியை மூன்று பகுதிகளாக 1910,1912,1923 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டு முற்றுவித்தனர் .

நீதிபதி கு . கதிரைவேற்பிள்ளை சூட்டிய ' தமிழ்ச் சொல்லகராதி ' என்னும் பெயருடன் இந்த அகரமுதலி வெளிவந்த போதிலும் மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டமையால் ' தமிழ்ச்சங்க அகராதி ' எனக் குறிப்பதே பெருவழக்காயிற்று .

ஒருசொற் பல்பொருள்களுக்கு விளக்கம் தரும்போது பொருள்களை 1, 2 என எண் குறியிட்டுக் காட்டியிருப்பது புதுமை . இதனால் ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உண்டு என்பதும் தெளிவுபடுகிறது . மேலும் , சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமான