முகப்பு | தொடக்கம் |
viii |
நூற்சான்றுகளையும் உதாரணம் என எடுத்துக்காட்டியது புதுமுயற்சி . சொற்பொருளுக்கு இலக்கிய இலக்கணம் முதலிய நூல்களிலிருந்து மேற்கோள் எடுத்துத் தந்த முதல் தமிழ் - தமிழ் அகராதி இதுவே . இவர் 344 நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளார் . சொல் மூலங்களைக் காட்டியதோடு வடசொற்கள் , இந்துஸ்தானிச் சொற்கள் , தெலுங்குச் சொற்கள் முதலியவற்றையும் இனஞ்சுட்டிக் காட்டியுள்ளார் . இந்த அகரமுதலியில் முந்திய அகரமுதலிகளில் இல்லாத பல சொற்களும் திருந்திய விளக்கங்களும் காணப்படுகின்றன . தமிழ் - தமிழ் அகரமுதலிகளுள் கால அடைவில் விரிவுபெற்ற பேரகராதி இதுவே .
லெக்சிகனை அடுத்துவந்த பேரகராதிகள்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன் என்னும் தமிழ்ப் பேரகராதி நிறைவுறும் நிலையெய்திய காலத்தில் , 1935 ஆம் ஆண்டிலே இரு பேரகராதிகள் தோன்றின . ஒன்று நெல்லை எஸ் . சங்கரலிங்க முதலியார் தொகுத்தளித்த ஜூபிலித் தமிழ்ப் பேரகராதி மற்றொன்று ஆனந்தவிகடன் அகராதி. ஜூபிலித் தமிழ்ப் பேரகராதியை வெளியிட்டவர் பி. அரங்கசாமி நாயகர் ஆவார் .இந்தப் பேரகராதி யாழ்ப்பாண அகராதி முதலிய பல அகராதிகளைக் கொண்டு புதுக்கியும் திருத்தியும் விளக்கியும் செம்மை செய்யப்பெற்றது ; சதுரகராதியின் அமைப்பை அடியொற்றியது . சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் பதிப்பாசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையவர்கள் இதற்கு முன்னுரை அளித்துள்ளார்கள் . இந்த அகராதி வெளிவந்த 1935ஆம் ஆண்டிலேயே ஆனந்தவிகடன் ஆசிரியர் ஆனந்தவிகடன் அகராதி என்னும் பெருந்தொகுதியை வெளிப்படுத்தினார் . ஆனந்தவிகடனில் போட்டிப் பந்தயங்கள் தொடர்ந்து வெளிவந்த காலம் . இப் போட்டிக்குப் பயன்படும் நோக்கில் எழுந்ததாயினும் முந்திய பேரகராதியில் உள்ள சொற்கள் இதிலும் உண்டு . வழக்குச் சொற்கள், மரூஉச் சொற்கள் , வட்டார வழக்கான பல குறைச்சொற்கள் , வேற்று மொழி வழக்குகள் முதலியவற்றை மிகுதியாகக் கொண்டுள்ளது ; 2,040 பக்கங்கள் கொண்டது ; அடுத்தடுத்து 1937 , 1938 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது , மூன்றாவது பதிப்புகளையும் பெற்றுள்ளது . எனவே , இந்த அகராதி எத்துணையளவாக நாட்டு மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது புலப்படும் . சதுரகராதியின் அமைப்பில் நான்கு வகையான அகராதிகளைக் கொண்டு அமைந்த பெருநூல் ,மதுரைத் தமிழ்ப் பேரகராதி . இவ்வகை நான்கு கூறுபாடுகளுடன் அமைந்த அகராதிகளுள் இதுவே இறுதியானது . பண்டிதர் பலர் இதனை உருவாக்குவதில் துணை புரிந்துள்ளனர் . மதுரையில் பெரிய புத்தக வெளியீட்டாளரும் புத்தக வணிகருமாக விளங்கிய இ. மா. கோபாலகிருட்டினக் கோனார் 1937-ல் இதனை அச்சிட்டு உலகிற்கு வழங்கினார் . இதுகாறும் வெளிவந்த யாழ்ப்பாண அகராதி , ஆனந்தவிகடன் அகராதி முதலிய பல அகராதிகளைக் கொண்டு புதுக்கியும் , திருத்தியும் , விளக்கியும் அவைகளில் விடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பற்பல நூல்களினின்றும் ஆராய்ந்து எடுத்துத் தந்துள்ளார் . கற்றுத் தேர்ந்த பண்டிதர் பலரால் தொகுக்கப்பெற்றது ; மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் எழுதிய முன்னுரையுடன் கூடியது . பெயரகராதி 605 பக்கம் ; பொருளகராதி 149 பக்கம் (606- 754 ) ; தொகையகராதி 89 பக்கம் (755 - 843 ) , தொடையகராதி 108 பக்கம் (844 - 951 ) . இவற்றிற்கு மேலும் இணைப்பாகத் தமிழ்மொழியில் வழங்கிவரும் உருது , அராபி முதலிய சொற்கள் தனிப்படத் தொகுத்துக் காட்டப்பட்டும் உள்ளன . இருமொழி அகராதிகள்: பிறமொழியார் தமிழ் பயிலத் தழிழுடன் பிறமொழி விளக்கமும் தரும் அகரமுதலிகள் வேண்டியிருந்தன . இருமொழி அகராதிகள் ஆக்குவதில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பாதிரிமார்களேயாவர் . வீரமாமுனிவரே இருமொழி அகராதிகளும் ஆக்கி முதலில் வழிகாட்டினார் என்பதனை முன்னர்க் கண்டோம் . அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழ் - ஆங்கில அகராதிகள் அதிகமாகத் தொகுத்து வெளியிடப்பெற்றன . |
![]() |
![]() |
![]() |