முகப்பு | தொடக்கம் |
ix |
பெப்ரிசியசு என்பார் 1779-ல் 185 பக்கங்கள்கொண்ட தமிழ்-ஆங்கிலச் சிற்றகராதி ஒன்றை வெளியிட்டார் . இதில் 9000 சொற்கள் இடம்பெற்றிருந்தன . இதன் பின்னர் இராட்லர் நான்கு பகுதிகளாகத் தம் தமிழ் - ஆங்கில அகராதியை அச்சிட்டார் ( 1834 , 1837 , 1839 , 1841 ) . வின்சுலோ அகராதி 1862-லும் தரங்கம்பாடி அகராதி 1897-லும் வெளிவந்தன . தமிழ் - ஆங்கில அகராதிகளில் தமிழ்ச்சொற் பொருளை முதலில் ஆங்கிலத்தில் தந்து அடுத்துத் தமிழ் விளக்கமும் சேர்த்து அமைப்பாராயினர் ; பெயர், வினை முதலிய சொற்பாகுபாடுகளை இனஞ்சுட்டும் குறிப்புகளும் உடன்சேர்த்துத் தந்துள்ளனர். சில அகராதிகளில் ஒரு சொல்லோடு தொடர்புடைய பிற சொற்கள், தொடர்கள் ஆகியவற்றையும் உடன் இணைத்து அமைக்கலாயினர். தமிழ் - ஆங்கில அகராதிகளுள் வின்சுலோ அகராதிதான் 67000 சொற்களைக் கொண்ட பேரகராதியாய் விளங்குகிறது. இதில் விடுபட்டுப்போன பல சொற்கள், பொருள்களைப் போப்புப் பாதிரியார் தம்முடைய படியில் குறித்துவைத்திருந்தார் . இவருடைய அகராதிப்படியை அடிப்படையாக வைத்துப் பல்வேறு புதுச் சேர்க்கைகளுடன் அமைந்ததே தமிழ் லெக்சிகன் எனப்படும் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி. தமிழில் வந்த மிகப் பெரிய இருமொழி அகராதி இதுவே. அறிஞர் பலர் கூடிப் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கப்பெற்றுது இந்த அகரமுதலி. இதன் ஆறு தொகுதிகளையும், இணைப்புத் தொகுதியையும் பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்கள் பதிப்பித்து 1939-ல் முற்றுவித்தார்கள். இஃது உலகப் புகழ்பெற்ற ஒரு பேரகராதியாக இப்பொழுது விளங்கிவருகிறது . தமிழ் லெக்சிகனின் சிறப்பு நிலை: தமிழ் - தமிழ் அகராதி , தமிழ்- ஆங்கில அகராதிகள் பலவாக வளர்ந்துவந்த போதிலும்் அவற்றில் பல குறைபாடுகள் நீக்கப்பட வேண்டியனவாயிருந்தன .இதுகுறித்துப் பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளையவர்கள் தெரிவிக்கும் கருத்துரை வருமாறு : முதலாவது , சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல வின்சுலோவுக்குப் பின்னரே அச்சில் வெளிவந்துள்ளன . அவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று. இரண்டாவது , சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்சுலோ முதலியோரது அகராதிகள் ஒன்வொன்றிலும் ஒவ்வொரு நயமிருந்தது . இந் நயங்கள் அனைத்தையும் ஒருங்குகொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்திசெய்வது அவசியமாயிருந்தது. மூன்றாவது , சொற்பொருள்களை அமைப்பதில் சில நியமங்களைக் கையாளுவதும் அவசியமாயிற்று. தமிழ் அகராதி நூல்கள் பலவும் பொருள்களையுங்கூட அகராதிக்கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும். வரலாற்று முறையிலும் இயலாத இடங்களில் கருத்துத் தொடரும் முறையிலும் இவற்றை அமைக்கவேண்டுவது இன்றியமையாததாகும். நான்காவது , சொல்லுக்குப் பொருளாகப் பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்கு உரிய பொருளின் லட்சணத்தையும் வரையறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கமே தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது. பரியாயச் சொல்லைக் கூறுவதுதான் லட்சணமாகக் கருதப்பட்டது. தமிழ் - ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள லட்சணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக் குறைகளை எல்லாம் நீக்கவேண்டுவது அவசியமாயிற்று. ஐந்தாவது , சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கவனஞ் செலுத்தியதே இல்லை . வடமொழி மூலங்கள் சிலவற்றிற்குத் தரப்பட்டிருந்தன. பிற திராவிட மொழிகளினின்று பிறப்பொத்த சொற்கள் சுட்டப்பெறவில்லை. |
![]() |
![]() |
![]() |