திருமதி நீலாம்பிகை அம்மையாரின் 'வடசொற் றமிழ் அகரவரிசை' வழக்கில் நடையாடும் வடசொற்களுக்கு இணையான தூய தமிழ்ச்சொற்களைக் கொண்டதொரு சிற்றகராதியாம்.மொழிமரபு சொற்பொருள் மரபுகளை விளக்கும் நூல்கள் சிலவற்றையும் அறிஞர்கள் அவ்வப்போது வழங்கியுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளராய் முன்பு விளங்கிய கே. என். சிவராஜபிள்ளை புறநானூற்றில் வரும் 79 சொற்களின் உண்மைப்பொருளை விளக்கிய 'சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி' என்னும் நூல் முற்படக்குறிக்கத்தக்கது (1968). சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராயிருந்த வே. வேங்கடராஜுலு ரெட்டியார் 'நுண்பொருள் விளக்கம்' என்னும் சொல்லிலக்கணநூலைத் தந்துள்ளார் (1963).
பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளையவர்களின் 'சொற்களின் சரிதம்' என்னும் நூல் சிற்சில சொற்களின் உருமாற்றம், பொருள் வளர்ச்சி, பொருள் மாற்றம் முதலியவற்றை விவரிக்கிறது. ஒரு சொல்லின் பிறப்புத் தொடங்கி மொழியில் அது வளர்ந்துவந்த சரிதம் அறிதற்கான வழிகாட்டும் முன்னோடி நூலாக இது திகழ்கிறது (1956).
புலவர் பூந்துறையான் என்பவர் 'மரபுத் தொடர்களும் சொற்றொடர்களும்' என ஓர் அகராதியைத் தக்க எடுத்துக்காட்டுகளுடன் அமைத்துத் தந்துள்ளார் (1977).
அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வரிசையில் தந்துள்ளார். இவர் தாம் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி செய்த காலத்தில் கண்ட சில மொழி வரலாற்றுச் செய்திகளை அகரவரிசையில் அமைத்துச் 'சொற்சுவை' என்னும் நூலாகத் தந்துள்ளார் (1978). இதனுள் 133 சொற்கள் ஆராயப்பட்டுள்ளன.
இலக்கிய வரலாற்று அகராதி:
தமிழில் பல நூல்களை ஆக்கி வெளிப்படுத்திய ந.சி. கந்தையாப்பிள்ளை 'தமிழ் இலக்கிய அகராதி' (1952), 'தமிழ்ப் புலவர் அகராதி' (1960) என்னும் இரு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவை தமிழிலக்கியப் பரப்பினையும் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றையும் அறியத் துணைநிற்கும் கருவி நூல்களாகும். இவரே 'காலக் குறிப்பகராதி' என்னும் வரலாற்றுச் சிறுநூல் ஒன்றும் ஆக்கியளித்துள்ளார். ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தின்வழி மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்கள் 'இலக்கிய வரலாற்றுப் பொருட் குறிப்பகராதி' என்னும் நூலை 1956-ல் வெளியிட்டார். இது பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்களின் 'இலக்கிய வரலாறு' என்னும் நூலுக்கான அகராதியாகும்.
தமிழில் அச்சில் வந்த நூல்களுக்கான விளக்கக் குறிப்புகளுடன்கூடிய ஒரு தொகுப்பை ஆங்கிலத்தில் ஜான் மர்டாக் என்பவர் 1865-ல் வெளியிட்டார். இந்தத் தொகுப்பிலிருந்து அந்த ஆண்டுவரையில் அச்சேறிய பல்துறை நூல்களைப்பற்றிய விவரங்கள் தெரியவருகின்றன.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ்நூல் விவர அட்டவணைகளின் தொகுப்பாசிரியனாய் நான் பணிபுரிந்தபோது அத் துறை வெளியீடாக மர்டாக்கின் இந் நூலட்டவணையை 1968-ல் மறுபதிப்பாகக் கொண்டுவந்தேன். இதில் பல்வேறு நூல் தொகுப்புகளைப்பற்றிய விவரங்களை உடன் இணைத்துத் தரலானேன். 1900 ஆண்டுவரை வந்த தமிழ்நூல் விவரங்களையும் உடன் இணைத்தேன். எனவே, இந்த இரண்டாம் பதிப்புச் சென்ற நூற்றாண்டுவரை அச்சான தமிழ்நூல் விவரங்களை அறியக் கருவி நூலாயிற்று.
தமிழ் வளர்ச்சித் துறை 1867-ல் முதல் அச்சான தமிழ் நூல்களுக்கு விவர அட்டவணைகள் தொகுத்துப் பல தொகுதிகளாக வெளியிட்டு வருகின்றது. இத்தொகுதிகளின் வாயிலாக நூல்கள்பற்றியும் நூலாசிரியர்பற்றியும் பலவகை இலக்கிய இலக்கண வரலாற்றுச் செய்திகள் குறித்தும் அரிய பல செய்திகள் தெரியவருகின்றன. இலக்கிய வரலாற்று ஆய்வாளருக்கு இவை மிகவும் பயனுடையன ஆகும்.