முகப்பு | தொடக்கம் |
xxv |
கலைச்சொல் அகராதிகள்: நம் பாரதநாடு விடுதலை பெற்றபின் பல்வேறு துறைகளிலும் புத்தெழுச்சியும் புத்தாக்கங்களும் மலர்வதாயின. பாரதநாட்டு மொழிகள் உயிர்பெற்று எழலாயின. மொழிவழி நாட்டுப் பிரிவினைமூலம் அந்தந்த மொழிபேசும் மக்கள் வாழும் நிலப்பரப்புகள் எல்லைகோலப்பட்டன. நாட்டு மொழிகளை வளப்படுத்த ஒவ்வொரு மொழியாளரும் முற்படலாயினர். தமிழ்நாட்டிலே 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்னும் கொள்கை வரவர வளர்ந்து வளம்பெற்றுக் கொண்டிருக்கிறது. கல்விநிலையங்களிலும் ஆட்சிமுறையிலும் தமிழ் தனக்குரிய சிறப்பிடத்தை அடையலாயிற்று. நீதிமன்றங்களிலும் அரியணை வீற்றிருக்கத் தமிழன்னை புகுந்துவிட்டாள். இந்நிலையில் ஒவ்வொரு துறைக்கும் வேண்டிய தமிழ்ச்சொற் கருவூலங்களைத் தொகுத்துப் போற்றும் முனைப்புத் தோன்றலாயிற்று. அறிவியல் முதலிய கலைகளையும் தமிழில் பயிற்றுவிக்கலாயினர். அப்பொழுது கலைகளுக்கு ஏற்புடைய சொல்லாக்கங்களைத் தொகுத்து வெளியிட அரசு ஆவன செய்து வந்துள்ளது. இதன் விளைவாகக் கலைச்சொல் லகராதிகள் பல்வேறு துறைகளுக்கும் தனித்தனி ஆக்கப்பெற்றன. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1971-ல் வேதியல், பொருளாதாரம், உளவியல், விலங்கியல், அரசியல், வரலாறு, புள்ளியியல், கணிதம், இயற்பியல், வாணிகவியல், தாவரவியல் ஆகிய துறைகளுக்குரிய கலைச்சொல் தொகுதிகளையும் 1973-ல் புவியியல், பொறியியல், தொழில்நுட்பவியல், வேதியியல் ஆகிய துறைகளுக்குரிய அகராதிகளையும் தனித்தனி வெளியிட்டுப் பரப்பியுள்ளது. பள்ளிகளுக்கான பாடநூல்களோடு கல்லூரிகளுக்கும் பயன்படத்தக்க பற்பல நூல்களையும் வெளியிட்டுப் பெரும்பணி புரிந்துவருகின்றது. தமிழக அரசு தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி, ஆட்சிச்சொல் லகராதி, சட்டச்சொல் அகராதி என்னும் முப்பெருந் தொகுப்புகளை வெளியிட்டு ஆட்சித் துறையினருக்குப் பயன்பட வழங்கியுள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மைத் தொடர்பான சொல்லகராதிகளை வெளியிட்டுள்ளது. பொறியியல், மருத்துவவியல் போன்ற அறிவியல் துறைக்கான சொற்களும் அவ்வத்துறை வாயிலாகவும் துறை வல்லுநர்களாலும் தொகுத்துப் பயன்படுத்தும் நிலை தோன்றி வளர்ந்துவருகிறது. முத்தமிழாயிருந்துவந்த நம் முன்னைத் தமிழ் இன்று பல்வேறு கலைத் துறைகளிலும் அறிவுத்துறைகளிலும் வளம்பெற்று வருவதால் தமிழ்ச்சொற் கருவூலம் மிகமிக நாள்தோறும் பெருகி வந்து கொண்டே யிருக்கிறது. சொற்பிறப்பு அகராதி: தமிழ்ச்சொற்களின் மூலங்களை ஆராய்ந்து விளக்கம் தரும் அகராதி முயற்சிகளும் தோன்றியதுண்டு. யாழ்ப்பாணம் எஸ். ஞானப்பிரகாசம் பாதிரியார் 'சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி' ஒன்றை ஆக்க முனைந்தார். அகரவருக்கத்தில் சில சொற்களுக்கு மாதிரிப்படிவம் ஒன்றையும் அச்சிட்டு (1939) வெளியிட்டார். ஆனால், இவர் முயற்சி வளர்ச்சியுறாது நின்று போயிற்று. இதே வகையில் வேறு சிலர் தொடங்கிய முயற்சியும் உருப்பெறவில்லை. பேராசிரியர் பரோவும் எமனோவும் சேர்ந்து ஆக்கிய திராவிட மொழிச் சொற்பிறப்பகராதி இங்குக் குறிப்பிடத்தக்கது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி: தமிழ்ச்சொல் மூலங்காண்பதில் முனைந்துநின்றவர் ஞா. தேவநேயப் பாவாணராவார். இவர் வேர்ச்சொற்கள் பற்றிய கட்டுரைகளும் நூல்களும் வெளியிட்டுள்ளார். இவர் தலைமையில் அரசாங்கம் அமைத்த 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி' ஆக்கம் அவர் காலத்திற்குப் பின்பும் நடந்துவருகிறது. அதில் முதற்பகுதி வெளிவந்துள்ளது. தமிழ் - ஆங்கிலம் அகராதிகளும் சில உள. இந்த வகையில் போப்புப் பாதிரியார் 1859-ல் வெளியிட்ட அகராதி 'Pope's Compendious Tamil-English Dictionary' முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது. |
![]() |
![]() |
![]() |