முகப்பு | தொடக்கம் |
xxvi |
தமிழ்-ஆங்கில, ஆங்கிலத்-தமிழ் அகராதிகள்: அதன்பின் 1870-ல் விசுவநாதபிள்ளை இவ்வகையில் 'Classical Tamil- English Dictionary', என்னும் ஒரு பெரிய அகராதியை உருவாக்கி வெளியிட்டுள்ளார். 'பிராஞ்சகராதி' என்பது இரு தொகுதிகளாக 1984-ல் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஆங்கில-தமிழ்ச் சிற்றகராதிகள் பல வந்துள்ளன. டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம் வெளிட்ட ஆங்கில-தமிழ் அகராதி ஒரு பேரகராதியாகும். இது சுருக்க ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியை ஒட்டி அமைக்கப்பெற்றது. 1223 பக்கங்கள்கொண்ட இந்த அகராதியை 1963-ல் தொடங்கி 1965-ல் முற்றுவித்தது ஒரு பெருஞ்சாதனையாகும்.தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்: இதுவரை சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தோன்றிய அகரமுதலிகளின் வரலாறுகளையும் அவற்றின் தன்மை, பயன்பாடு முதலியவற்றையும் பார்த்தோம். இனி, அண்மையில் உருவாகி இப்பொழுது வெளியிடப்பெறுகின்ற தமிழ்-தமிழ் அகரமுதலி தோன்றி வளர்ந்து நிறைவு எய்திய பின்புல வரலாற்றை நோக்குவோம். தொடக்க காலத்தில் தமிழக அரசின் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் ஒரு பணியாக நூல் வெளியீடு தொடங்கியது. பின்னர்ப் பள்ளிகள் கல்லூரிகளுக்கான பாடநூல் தேவைகளை நிறைவேற்றும்
பெரும்பணி சாரவே, அதனின்றும் கிளைத்துப் பாடநூல் நிறுவனம் தோற்றுவிக்கப்பெற்றது. பள்ளிகள் கல்லூரிகளுக்கான
பாடநூல்களையும் பொதுமக்கள் பயில்வதற்கான தரமான கலை, அறிவியல் நூல்களையும் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுவருகின்றது. பள்ளி கல்லூரிகளில் பயில்வார்க்கும்
தாமே முயன்று கற்பார்க்கும் துணைநிற்கும் வகையில் தமிழ்-தமிழ் அகரமுதலி ஒன்றைத் தொகுப்பித்து வெளியிட இந்நிறுவனம் அவாக் கொண்டது. மாண்புமிகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் கல்வி அமைச்சராயும், பேராசிரியர் சு. ந. சொக்கலிங்கம் அவர்கள் மேலாண்மை இயக்குநராயும், திரு பா. மாணிக்கம் அவர்கள் செயலாளராயும் இருந்த காலத்திலே 1975-ல் இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலிக்கு வித்திடப் பெற்றது. இதனை ஆக்குவதற்கு ஊக்கமளித்து ஆணை பிறப்பித்த நாவலர் அவர்களுக்கும் செயற்படுத்திய ஏனையோர்க்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அகரமுதலியின் தொகுப்புப் பணி: தமிழ் வளர்ச்சித் துறையில் வெளியிடத் தொடங்கிய காலமுதல் பல்லாண்டுகளாகப் பல நூல்களைப் பதிப்பித்து வந்ததோடு தமிழ்நூல் விவர அட்டவணைக்கான திட்டமிட்டுப் பல தொகுதிகளையும் நான் உருவாக்கி வெளிப்படுத்தியதைத் தமிழ் வளர்ச்சித் துறையினர் நன்கு அறிவர். பாடநூல் நிறுவன வெளியீடுகள் பலவற்றின் பதிப்பாசிரியனாயும், ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்கான பாடநூல் தொகுப்பாசிரியனாயும், தொடக்கப்பள்ளி நூல்களுக்கு மேலாய்- வாளனாயும் பல பணிகளில் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தேன்; மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை, பேராசிரியர் அ. கி. பரந்தாமனார் முதலியோருடன் சில நிறுவன ஆய்வுக்குழுக்களில் பணிசெய்யும் வாய்ப்பும் பெற்றிருந்தேன். என் பணி நேர்மையை நன்கு அறிந்திருந்த தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் செயற்குழு, அகரமுதலி தொகுக்கும் பணியினை எனக்கு அளித்தது. நிறுவனத்தின் செயற் குழுவுக்கு நான் பெரிதும் கடப்பாடுடையேன். எனக்குத் துணையாக இரண்டு பதிப்பாசிரியர்களையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் அமர்த்திக்கொண்டு அகரமுதலிப் பணியை ஓராண்டிற்குள் நிறைவேற்றித் தருமாறு 15-2-1975-ல் ஆணை பிறப்பித்தனர். அப்பொழுது நான் சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சித் துறைக்குத் தலைவனாயிருந்தமையால் பல்கலைக்கழகத்தாரின் இசைவினையும் பெற்றேன். என் பிற பணிகளுக்கிடையில் அகரமுதலித் தொகுப்பினையும் கவனித்து ஆவன செய்துவரலானேன். |
![]() |
![]() |
![]() |