முகப்பு | தொடக்கம் |
xxviii |
சிறப்புப் பெயர்களுள் வேறுவேறு ஏதுக்களால் பெயர்பெறும் காரணப்பெயர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. காகுத்தன் , பற்குனன், மைதிலி போன்றவற்றை வடமொழியில் 'தத்திதாந்த நாமம்' என்பர். அன்றியும் குறுகி வழங்கும் மரூஉ வழக்கான சில சிறப்புப் பெயர்களும் சேர்க்கப் பெற்றன. ' மயிலை ' என்பது மயிலாப்பூரைக் குறிக்கும். ' முகவை ' என்பது இராமநாதபுரத்திற்குரிய மாற்றுப் பெயர். இவைபோல்வனவும் தழுவப்பெற்றன. நிகண்டு ஆட்சி மட்டுமேயுடைய சொற்கள் நீக்கப்பெற்றன. கலைச்சொற்களுள் இன்றியமையாத பொதுச்சொற்கள் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. கலைச்சொற்போலவே ஏற்புடைய புத்தாக்கச் சொற்களும் எடுத்துக்கொள்ளப்பெற்றன. தொகைப்பெயர்கள் பெருவழக்குடைய இருசுடர், முத்தீ என்றாற்போல்வன சேர்த்துக் கொள்ளப்பெற்றன. தனிப்பொருள் சுட்டும் தொடர்மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளன. கைலை-கயிலை, வைத்தியன்- வயித்தியன் என்பவற்றுள் ஐகாரமும் அகரமும் ஒத்திருக்கின்றன. நிலம் - நிலன், அறம் - அறன், பந்தல் - பந்தர், கொம்பு - கொம்பர் போல்வனவான வடிவ வேறுபாடுகளும் கருதப்பெற்றன. இவைபோன்றே உணா - உண -உணவு; நிலா - நில - நிலவு; முழா - முழ - முழுவு என ஆகார ஈற்றுச் சொல்லின் வடிவவேற்றுமையும் உரிய இடங்களில் சுட்டப்பெற்றன. இவ்வாறாகச் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகு கவனம் செலுத்தப்பெற்றது. தமிழ் லெக்சிகனில்போல அகரவரிசையில் மெய் முன்னும் உயிர்மெய் பின்னுமாக வரும் வரிசைமுறை தழுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருள்கள் தனித்தனி சீட்டுகளில் பதிவு செய்யப் பெற்றன. செய்ம்முறை: தமிழ் பயில்வார் அனைவர்க்கும் பள்ளியிற் பயிலும் மாணவர் தொடக்கமாகப் பல்கலை பயிலும் முதுகலை மாணவர், ஆசிரியர் முதலியோர்க்கெல்லாம் இது பயன்படத்தக்க வண்ணம் உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக்கொண்டது ஆதலின், பாடப்புத்தகங்களிலிருந்தே சொல் தொகுப்புத் தொடங்கப்பெற்றது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பாடநூல்களில் தரப்பெற்ற அருஞ்சொற்கள் முதலில் எடுத்துக்கொள்ளப்பெற்றன. அடுத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வெளிவந்த சிற்றகராதிகளுள் எட்டுத் தெரிந்துகொள்ளப்பெற்றன. அவையாவன; அகராதிச்சுருக்கம், இளைஞர் தமிழ்க் கையகராதி, தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி, கழகத்தமிழ்க் கையகராதி, மாணவர் தமிழகராதி, நவீன தமிழகராதி, கழகத் தமிழகராதி, கோனார் தமிழ்க் கையகராதி என்பன. இந்த அகராதிகளுள் ஒவ்வொன்றையும் முறையே எடுத்து ஏற்கெனவே எழுதப்பெற்றிராத சொற்கள், புதிய பொருகள் ஆகியவை இணைத்துக்கொள்ளப் பெற்றன. இவ்வாறாக இந்த அகராதிகளில் இடம்பெற்ற சொற்பொருள்கள் அனைத்தும் எடுத்து எழுதிக்கொள்ளப்பெற்றன. தமிழ் - தமிழ் அகராதிகளுள் மிகப் பெரிய யாழ்ப்பாணம் கு. நீதிபதி கதிரைவேற் பிள்ளை தொகுத்த தமிழ்ச்சங்க அகராதி எனப்படும் தமிழ்ச் சொல்லகராதி. இதனினும் பெரிதாக உள்ள இருமொழித் தமிழ்ப் பேரகராதி சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான தமிழ் லெக்சிகன். இவ்விரு பேரகராதிகளையும் உடன்வைத்து ஏற்கெனவே தொகுத்து அமைத்த சொற்பொருள்களைச் சரிபார்த்துச் செப்பம் செய்தும், அவற்றில் இடம்பெறாத இன்றைய வழக்கிற்கேற்பப் பயனுடைய புதிய சொற்பொருள்களை இணைத்தும் இந்த அகராதி உருவாக்கப்பெற்றது. இதுகாறும் வெளிவந்துள்ள அகராதிகள் பலவற்றையும் நோக்கினால் அவை ஒவ்வொன்றும் அவ்வக் காலத் தமிழின் வளர்நிலையைப் படம்பிடித்துக் காட்டும்; |
![]() |
![]() |
![]() |