முகப்பு | தொடக்கம் |
xxix |
தமிழறிஞர்களின் உளப்பாங்கையும் உணர்த்தும். அவ்வகையில் இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதியில் எழுந்துள்ள இந்த அகரமுதலியும் இக்காலத் தமிழ்
வளர்ச்சியைக் குறிக்கோளாகக்கொண்டு தொகுக்கப்பெற்றுள்ளது. அறிஞர் பெருமக்களின் கருத்துகளையும் அவர்தம் நோக்கையும் போக்கையும் அடியொற்றி இந்தத் தமிழ் - தமிழ் அகரமுதலி ஆக்கப்பெற்றுள்ளது. இந்த அகரமுதலியைத் தொகுப்பதற்கு ஓர் ஆண்டுக்காலமே ஒதுக்கப்பெற்றது. எனினும், பணி வளர்ந்துவந்த நிலையில் அந்தக் கால அளவு போதவில்லை. பின்னர் ஆறுமாதமும், அடுத்து நான்கு மாதமும் வேண்டிப்பெற்று ஓராண்டு பத்துத் திங்களில் இப் பணியினை நிறைவு செய்தேன். பணிக்காலமும் அகரமுதலி வளர்ச்சியும்: பணியின் முன்னேற்றம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கைகளும் அனுப்பிவைக்கப்பெற்றன. நிறுவனப் பதிப்பாசிரியர் அவ்வப்போது அகரமுதலியின் வளர் நிலையைக் கண்காணித்து நிறுவனத்திற்கு விவரம் அறிவித்துவந்தார் . கடைசியாகப் பணி முன்னேற்றத்தை முற்றுமாய்க் கவனித்துப்பார்த்து ஆய்வு செய்வதற்காக அப்பொழுது தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராயிருந்த திரு. கொண்டல் சு. மகாதேவன் அவர்கள் நிறுவனத்தாரால் கேட்டுக் கொள்ளப்பெற்றார். திரு. மகாதேவன் அவர்கள் 29-11-76 ல் நேரில் வந்து பார்த்துப் பணிநிலை வளர்ச்சிகளை ஆராய்ந்து தம் பரிந்துரையை நிறுவனத்திற்குத் தந்தார். 'அ' முதல் 'வௌ' வரையிலான அகரமுதலியின் 3092 பக்கங்களில் அமைந்த கையெழுத்துப்படியை 31 தொகுதிகளாக அமைத்து 30-12-1976 ல் நிறுவனத்தில் ஒப்படைத்தேன். மேலாய்வுக்குழு: அகரமுதலிப்படிகளை ஒப்படைத்தும் மூன்று ஆண்டுகளுக்குமேல் அப்படியே இருந்து வந்தது. திரு. குழந்தைவேல் அவர்கள் மேலாண்மை இயக்குநராய் வந்தபின் அகராதிப் படிகளை ஆராய்வதற்கு மேலாய்வுக் குழு ஒன்றை அமைத்தனர். இக் குழுவில் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் , பேராசிரியர் அ. மு. பரம சிவானந்தம், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கொண்டல் சு. மகாதேவன் மூவரும் இடம்பெற்றனர். இவர்கள் அகராதிப் படிகளைப் பார்வையிட்டு ஆராய்ந்து ஒருசில மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தனர். அவ்வாறே முற்றுமாய் மறு ஆய்வுசெய்து குழுவின்முன் மீண்டும் வைத்தேன். அதன்பின் அகரமுதலியைக் கூர்ந்து ஆராய்வதற்காக நான்கு முறைகளுக்குமேல் கூடினர். ஒவ்வொரு முறையும் நான்கைந்து நாள்கள் தொடர்ந்து குழுக்கூட்டம் நடைபெற்றது. யானும் உடனிருந்து குழுவினர் எழுப்பிய வினாக்கள், ஐயப்பாடுகள் முதலியவற்றிற்கு விளக்கம் தந்தும் திருத்தங்களை முறைப்படி அமைத்தும் வந்தேன். குழுவினர் பக்கம் பக்கமாய்ப் பார்வையிட்டு முற்றுவித்தனர். அதன்பின்பே அகரமுதலியின் அச்சுப்பணி தொடங்கப் பெற்றது. அகரமுதலியின் அச்சுப்பணி: அகரமுதலியின் அச்சுப்பணி நிறுவனப் படி - பதிப்பாசிரியர் மேற்பார்வையில் நடைபெறலாயிற்று. நான் வெளியூர்களில் பணி ஏற்று வந்துள்ளதால் சென்னையிலே பறங்கிமலையில் உள்ள பகத் அச்சுக்கூடத்தில் நடைபெறத் தொடங்கிய அச்சுப்பணியை உடனிருந்து கவனிக்க இயலாததாயிற்று. இதற்கெனப் புலவர் சா. சங்கரலிங்கம் அவர்களைப் பகுதிநேரப் படிதிருத்துநராக அமர்த்தி அச்சுப்படி பார்க்கச்செய்தனர். அவர் பார்த்தபின் ஒவ்வொரு நிலையிலும் முற்றுமாய் மீண்டும் ஆழ்ந்து பார்வையிட்டுப் படி-பதிப்பாசிரியர் அவர்கள் இதனை அழகுற அச்சிடுவித்தார்கள். இவர்களுடைய தமிழ்க் காதலும் பற்றும் அகரமுதலியைச் செப்பமுறப் பதிப்பிக்கப் பெருந்துணையாயின. இவர்களுடைய பணி பெரிதும் பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிடும் இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலி 1016 பக்கங்களில் அமைந்த ஒரு பேரகராதியாகவே ஆயிற்று. இதன்கண் 64,048 சொற்கள் இடம்பெற்றுள்ளன. |
![]() |
![]() |
![]() |