முகப்புதொடக்கம்

xxxv


இம் முகவுரையை முற்றுவிப்பது எனது கடமையாகும். இளமையிலே, 'தமிழ் படிக்கச் செல் முன்னுக்கு வருவாய்' என்று அருள்நோக்குடன் ஆசிவழங்கிய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் எனக்கு எப்பொழுதும் தெய்வமாகவே காட்சிதருபவர்களாவார். திருவையாற்று அரசர் கல்லூரியில் எனக்குத் தமிழறிவுறுத்திய பேராசிரியர் பெருமக்கள் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை, ச. சோமசுந்தரதேசிகர், ரா. புருடோத்தம் நாயுடு, இ. கோவிந்தசாமிப்பிள்ளை, சுந்தரராகவாச்சாரியார் ஆகியோர் இன்று மறைந்து தெய்வமாகிவிட்டார்கள். இவர்களையெல்லாம் என் நெஞ்சாரப் பணிந்து போற்றுகிறேன்.

தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் முதலாவது இடத்தைப் பெற்ற என்னை- தமிழகத்தின் தென்குமரியெல்லையை அடுத்திருந்த என்னை-சென்னைமாநகருக்கு அன்போடு அழைத்தவர் பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை யவர்களாவார். 'உன் கல்வியும் பணியும் சென்னையில் அமைதல் நன்றாயிருக்கும் ' என்று அவர்கள் அறிவித்தவுடனேயே 1941ஆம் ஆண்டு சென்னையை நோக்கி வந்தேன். நான் அந் நகரில் ஆசிரியப் பணி பெறவும் அவர்கள் உதவினார்கள். தாம் பணிபுரிந்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலேயே இரண்டு ஆண்டுக்கள் ஆராய்ச்சி மாணவனாக ஏற்றுப் பயிற்சி தந்தார்கள். சென்னை வந்த நாள்முதல் அவர்களின் இறுதிக்காலம் வரையில் அவர்களின் நிழலோடு நிழலாய்ச் சார்ந்து வாழும் பேறுபெற்றேன். இதனால் பதிப்புத்துறையிலும் அகரமுதலி ஆக்கப் பணிகளிலும் பயிற்சி பெறலானேன்; தமிழ்ப் பெரியார்களையும் அறிஞர் பலரையும் தெரிந்து பழகும் வாய்ப்பும் பெற்றேன். பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்களின் கீழிருந்து நான் பெற்ற பயிற்சியே அவர்கள் காலத்திற்குப் பிறகும் அவர்கள் வழியைப் பின்பற்றிப் பற்பல தமிழ்ப்பணிகளைச் செய்ய ஊக்குவித்தது. பேராசிரியர் அவர்களுக்கு நான் எழுமையும் நன்றிக் கடப்பாடுடையேன்.

தமிழ்-தமிழ் அகரமுதலியின் தொகுப்பாசிரியனாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனச் செயற்குழுவிற்கு என் நன்றியும் வணக்கமும் உரியனவாகுக.

அகராதியின் ஆக்கத்திற்கு உடனிருந்து உதவிய துணைவர்கள் திரு. சிவ. பச்சையப்பன், எம்.ஏ., டாக்டர் அ. நாகலிங்கம், திருமதி கலையரசி நாகலிங்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது ஒருபாலாக, இளைஞர்களாகிய இவர்கள் நல்வாழ்வு பெற வாழ்த்துகிறேன்.

அகரமுதலியின் மேலாய்வுக் குழுவினராய் அமர்ந்து எனக்கு ஊக்கம் தந்து நெறிப்படுத்திச் செம்மையாக அமைக்கத் துணைபுரிந்த பேராசிரியப் பெருமக்கள் மூவரையும் அடுத்து நினைவுகூர்தல் முறையாகும். பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் செலுத்திக்கொள்கிறேன்.

அகரமுதலியின் வளர்ச்சியில் எனக்குக் கைகொடுத்து நல்ல பல கருத்துகளை நல்கி உதவிய நிறுவனப் பதிப்பாசிரியர் அவர்களுக்குப் பெரிதும் நன்றிக் கடப்பாடுடையேன்.

மாண்புமிகு அமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் வித்திட்ட இந்த அகரமுதலி இன்று கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் அவர்கள் காலத்தில் நிறைவுறுகிறது. மேலாண்மை இயக்குநர்களாக இருந்த பேராசிரியர் சு. ந. சொக்கலிங்கம் அவர்கள் காலத்தில் இப் பணி தொடங்கப்பெற்று, திரு. குழந்தைவேல் அவர்கள் காலத்தில் மேலாய்வு செய்யப்பெற்றுச் செம்மையுற்று, தத்துவமேதை டி. கே. சீனிவாசன் அவர்கள் காலத்தில் அச்சுப்பணி தொடங்கப்பெற்று, திருமதி ஈ. வெ. கி. சுலோசனா சம்பத் அவர்கள் காலத்தில் நிறைவுபெற்று வெளிவருகிறது.

அகரமுதலியின் அச்சுப்பணியைச் சென்னை, ஆலந்தூரிலுள்ள பகத் அச்சுக்கூடத்தார் அழகுற அச்சிட்டுள்ளமை பெரிதும் பாராட்டுக்குரியது.

இவ்வாறாக இந்த அமரமுதலி வெளிவரப் பல்லாற்றானும் துணைநின்ற பெருமக்களுக்கு எல்லாம் உளமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்,
1-5-84

மு. சண்முகம் பிள்ளை