முகப்பு | தொடக்கம்தொடக்கம் |
xxxiv |
பெரும் பேராசிரியர்களாக விளங்கிய டாக்டர் உ.வே. சாமிநாதையர், பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை முதலியோரும் இம் முறையையே பின்பற்றித் தாம் பதிப்பித்த நூல்களில் அகரநிரல்
அமைத்துள்ளனர். இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலியிலும் இரண்டாம் எழுத்தில் மெய் முன்னாக உயிர்மெய் பின்னாக வரும் முறைமையே தழுவப்பட்டுள்ளது.
இரண்டாம் எழுத்து மட்டுமன்று; அதன்பின் தொடரும் எழுத்துகளிலும் மூன்று, நான்கு, ஐந்தாம் எழுத்துவரையிலுங்கூட அகரநிரல் முறைப்படி சொற்கள் அடுக்கப் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக அருள், அருள்வாக்கு, அருள்(ளு)தல், அருளகம், அருளம், அருளரசி, அருளல், அருளவம், அருளறம், அருளாழி, அருளாழிவேந்தன், அருளிச்செயல், அருளிப்பாடு எனவரும் சொற்கோவையை உற்றுநோக்கின் மேற்குறித்த அகரநிரல்முறை விளக்கமாகும். நாம் விரும்பும் சொற்களை எளிதில் பார்த்தறிவதற்காகவே அகராதியின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இரண்டு பத்தியின் தலைப்பிலும் இரண்டு சொற்கள் தரப்பட்டிருக்கும். முதற்பத்தியின் தலைப்பில் இருப்பது தலைமொழி அல்லது முடிமொழி எனப்படும். அது அப் பத்தியின் தொடக்கமாக அமையும் சொல்லாகும். இரண்டாம் பத்தியின் தலைப்பில் இருப்பது கடைமொழி அல்லது வால்மொழி எனப்படும். இது இரண்டாம் பத்தியின் இறுதிச்சொல்லாக இருக்கும். தலைமொழிக்கும் கடைமொழிக்கும் இடையே அவற்றிற்குட்பட்ட அகரவரிசைச் சொற்கள் இடம்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக, 'உருவத்திருமேனி' என்பது தலைமொழியாகவும் 'உரைகோள்' என்பது கடைமொழியாகவும் இத் தமிழ்-தமிழ் அகரமுதலியின் 168ஆம் பக்கத்தில் வருவது காண்க. அவ்விரண்டிற்கும் இடைப்பட்டுத் தரப்பட்டுள்ள அகரநிரல் சொற்களையும் நோக்கி அகரவரிசையின் முறைவைப்பைக் காணலாம். உருவம், உருவாணி, உருவொளி, உருளரிசி, உருளை, உரை, உரைகல் முதலிய சொற்களைக் காணவேண்டுமாயின் இவ் விரண்டு தலை கடைமொழிகளைக் கொண்ட பக்கத்தில் எளிதில் காணலாம் என்பதனை அறிதல் வேண்டும். மேலும், எழுத்து வேறுபாடுகளைக் கருதியும் அகரநிரல் பார்க்கவேண்டிய இடங்களும் உள. இதுகுறித்துத் தமிழாசிரியர் சே. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் தெரிவிக்கும் கருத்துரை வருமாறு: "அருஞ்சொற்பொருள் தேடுகையில் ரகர றகர பேதத்தையும், லகர ளகர பேதத்தையும, ணகர னகர பேதத்தையும் , குறில் நெடில் பேதத்தையும் , பெயர் வினை பேதத்தையும அறிதல் மிகவும் அவசியம். உதாரணமாக இறை என்னுஞ் சொற்பொருள் தேடுகையில் இரை என்னுஞ் சொற்கும் பொருள் தேடவேண்டும்; தாள் என்னும் மொழிக்குப் பொருள் பார்க்கையில் தால் என்னும் பதத்திற்கும் பொருள் பார்க்கவேண்டும்; தெண் என்னும் வார்த்தைக்குப் பொருள் பார்க்கையில் தென் என்னும் பதத்திற்கும் பொருள் பார்க்கவேண்டும். களை என்னும் மொழிக்குப் பொருள் பார்க்கையில் காளை என்னும் பதத்திற்கும் பொருள் பார்க்கவேண்டும். இம் முறைப்படி அகராதி பார்த்தாற்றான் அகராதி பார்த்தலால் எய்தவேண்டிய பயனை எய்தலாம்." (தமிழ் வியாசம்,பக்.148)
இவர்கள் கூறுமாறு அகரமுதலியில் தொடர்புடைய சொற்களையும் பொருள்களையும் பார்த்துவந்தால் மொழியறிவு பெருகும்; பிழையின்றி எழுதும் ஆற்றல் மிகும். ஒருவர் தம்முடைய பேச்சிலும் எழுத்திலும் ஏற்புடைய சிறப்பான சொற்களைப் பயன்படுத்துவதற்கு இத்தகு அகரமுதலிப் பயிற்சி கைகொடுத்து உதவும். ஆகவே, மாணவர் முதல் ஆசிரியர் ஈறாக மொழித்திறம் பெற விழைவார்க்கு எல்லாம் கைகொடுத்து உதவும் அருந்துணைவனாக அகரமுதலிகள் விளங்குகின்றமை காணலாம். தமிழ்க் கல்வியில் மேன்மைபெற விரும்புவார் எல்லார்க்கும் இந்தத் தமிழ்-தமிழ் அகரமுதலி உற்ற துணையாய் உதவும் என நம்புகிறேன். நன்றியுரை: அகரமுதலிப் பெரும்பணியை அறிவாற்றல்களில் எளியனாகிய யான் தொகுத்து நிறைவு செய்யத் துணைநின்றவை சான்றோர்களின் அருள்நோக்கும் எனக்குப் பயிற்சி அளித்த பேராசிரியப் பெருமக்களின் வாழ்த்துமேயாகும். இப்பெரியார்களை இங்கு நினைவுகூர்ந்து |
![]() |
![]() |
![]() |