அவ்வளவு முகாமையான கல்வி பெண்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? வழுதியின் இந்தக் கேள்வி, முதற்கேள்வியின் நோக்கத்தை இப்போது புரியவைத்துவிடுகிறது. புரிந்து கொண்ட நாகனாரும் ஆண் பெண் சமத்துவத்தின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறார்.
“ மண்ணும் ஒளியும் மழையும் பொதுமை எண்ணும் எழுத்தும் இருபாற் பொதுமை கண்கள் இரண்டும் காண்டற் குரித்தென ஒன்றுவிட் டொன்றை உரைப்பார் உளரோ? செவிகள் இரண்டுள் கேட்டற் குரிய செவியீ தென்று செப்புநர் உளரோ?”
சமத்துவ விளக்கைக் குமுகாயத்தின் ஒவ்வொரு துறைக்கும் உயர்த்திப் பிடித்து, வெளிச்சக் கதிர்களை விரிக்கிறது இக்காப்பியம்.
‘வடமொழியில் வழிபாடு செய்வதுதான் இறைவனுக்குப் பிடிக்கும்’ என்று கடவுளின் மனத்தை நகலெடுத்தவன் போல் வாதாடுகிறான் கணியன் நம்பி. தமிழ்மானம் காக்கும் ஓடும் நாகனாரிடமிருந்து கருத்துக்கணைகள் சீறிப்பாய்கின்றன.
“ பிறமொழி வெறுப்பன் இறைவன் என்பது அறமும் அன்றே; அறிவும் அன்றே! சீனர் யவனர் சிங்களர் சாவகர் சோனகர் முதலோர் கோநகர் ஈண்டு வாணிகம் பொருட்டா வைகினர் ஈண்டி பேணி அவர்தொழூஉம் பெரும்பெயர்க் கடவுளர் திருச்செவி மாந்தித் திளைப்பது எம்மொழி? திருத்தகும் அம்மொழி தேவ மொழியோ? எந்நாட் டுறையும் இறைவன் அவரவர் அந்நாட் டம்மொழி அகமுற உவப்பர் தென்னா டுடையன் தென்மொழி வெறுப்பனோ?”
இனஎழுச்சிப் பெருவெள்ளம் இந்நாடகம் முழுவதும் இடையிடையே குமிழியிட்டுப் பாய்கின்றன.
|