கவிராயர், திருத்தணிகை ‘விசாகப் பெருமாளையர், கூழங்கைத் தம்பிரான், ஊற்றங்கால் ஆண்டிப்புலவர், சடகோப ராமானுசாச்சாரியார், பவானந்தம் பிள்ளை, களத்தூர் வேதகிரி முதலியார், கா. நமச்சிவாய முதலியார், தண்டபாணி தேசிகர், புலவர் சோம இளவரசு, மோசசு பொன்னையா முதலியோர் எழுதிய நன்னூல் உரைகள் குறிப்பிடத்தக்கன. மொழியைப் புரிந்துகொள்ள இலக்கணங்கள் தோன்றின. இலக்கணங்களை விவரித்துக் கூறின உரைகள். உரைகளை எளிமையாக்குகின்றன பதிப்புகள். இன்றைய காலக்கட்டத்திலும் பதிப்புகள் பரந்துபட்ட அனுபவம், அறிவு மற்றும் ஆராய்ச்சியின் விளைவாகச் சிறப்புறுகின்றன. பேராசிரியர் அ. தாமோதரன் பதிப்பித்த இந்த நூலில் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் விருத்தியுரையும் தரப்பட்டுள்ளன. இந்த நூலின் சந்திப்பிரிப்பு, மொழி எளிமையாக்கம் இரண்டும் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. பாட பேதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிக்குறிப்புகள் எல்லா உரைகளிலிருந்தும் மீட்டுருவாக்கப்பட்ட முடிவுகளைக் காட்டுவதால் இந்த நூல் எல்லா உரைகளையும் உள்ளடக்கிய முழுமையான உரையாகத் திகழ்கிறது எனலாம். இந்நூலாசிரியர் முனைவர் அ. தாமோதரன் அவர்கள் நன்னூல் உரையாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களால் மறைந்துவிட்டது என்று கருதப்பட்ட கூழங்கைத் தம்பிரான் உரையை மீட்டு எடுத்துத் தந்தவர். இலண்டன் நூலகத்தில் இருந்து அதனைப் பேராசிரியர் அ. தாமோதரன் அவர்கள் படியெடுத்து ஜெர்மனியில் வெளியிட்டார். பின்னர் நிறுவனம் அந்நூலை மறுபதிப்புச் செய்தது. வெளிநாட்டுத் தமிழறிஞரான அ. தாமோதரன் அவர்களின் இந்த நன்னூல் விருத்தியுரையையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. அவரின் அறிவும், ஆற்றலும், புலமையும் இந்த உரை தெளிவு பெற வழி வகுத்துள்ளன. இந்த அரிய படைப்பு, காலத்தை வென்று என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்நூலை வெளியிடுவதற்கு நிதி நல்கிய மேற்கு ஜெர்மனி தெற்காசிய நிறுவனத்தில் உள்ள ஹைடல்பெர்க் பல்கலைக் கழகத்திற்கு நன்றி. | |
|
|