பக்கம் எண் : 150
  

நன்னூல் விருத்தியுரை
 

எழுத்தின் பெயர்
 

{63} 

அம்முத லீரா றாவி கம்முதன்
மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்.
 
     எ-னின், ஒருசார் எழுத்தினது பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்: அகரம் முதல் ஒளகாரம் ஈறாகக் கிடந்த பன்னிரண்டினையும் ஆவி
என்றும் ககரம் முதல் னகரம் ஈறாகக் கிடந்த பதினெட்டினையும் மெய் என்றும்
நூல்களால் சொன்னார் அறிவுடையோர் எ-று.

     கடவுளால் ஆவி, மெய் என்று அமைத்த பெயர்க் காரணம் உயிர்களான் முற்றும்
உணர்தற்கு அருமையும் கடவுள்நூல் உணர்ந்தோர் வழிச் செல்லும் தமது பெருமையும்
தோன்ற, ‘விளம்பினர் புலவர்’ என்றார்.

     ஆவியும் மெய்யும் போறலின் இவ்விரு வகை எழுத்திற்கும் ஆவி, மெய் என்பன
உவமவாகுபெயராய்க் காரணப் பொதுப்பெயர் ஆயின. ஏனையவும் இவ்வாறே காண்க. (8)
 

குற்றெழுத்து
 

64.

அவற்றுள்,
அஇ உஎ ஒக்குறி லைந்தே.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: ஆவி, மெய் என்றவற்றுள் இவ்வைந்தும் குற்றெழுத்தாம் எ-று. (9)
 

நெட்டெழுத்து
 

65.

ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில்.
 
     எ-னின், இதுவும் அது.

     இ-ள்: இவ்வேழும் நெட்டெழுத்தாம் எ-று. (10)


சுட்டெழுத்து
 

66.

அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே.
 
எ-னின், இதுவும்56 அது.
------------------------------------
     56இந்நூற்பாவுக்கு வைத்தியநாத தேசிகர் (இல. விள. 6) எழுப்பும் தடையும  அதற்குச் சாமிநாத தேசிகரும் (இல. கொ. 8) சிவஞான முனிவரும் (இல. சூறா. பக். 91) கூறும் மறுப்புரைகளும் அறியத் தக்கன.