பக்கம் எண் :
 
27

இரண்டாவது

சொல்லதிகாரம்1

1. வேற்றுமைப் படலம்2

29. வேற்றுமையின் தொகையும், காரகத்தின் தொகையும்

எட்டாம் எழுவாய் முதற்பெயர் வேற்றுமை; ஆறுளவாம்
கட்டார் கருத்தா முதற்கா ரகம்;அவை கட்டுரைப்பின்
ஒட்டார் கருத்தா கருமங் கரணமொண் கோளியொடும்
சிட்டா ரவதியொ டாதாரம் என்றறி தேமொழியே!

(இ-ள்.) எழுவாய் வேற்றுமை முதலாகப் பெயர் வேற்றுமை எட்டுளவாம்; அவைதாம் எழுவாய் வேற்றுமையும், இரண்டாம் வேற்றுமையும், மூன்றாம் வேற்றுமையும், நான்காம் வேற்றுமையும், ஐந்தாம் வேற்றுமையும், ஆறாம் வேற்றுமையும், ஏழாம் வேற்றுமையும், விளி வேற்றுமையும் எனக்கொள்க; 3கருத்தா முதற் காரகம் ஆறுளவாம்; அவை சொல்லும் பக்கத்துக் கருத்தாக் காரகம், கருமக் காரகம், கரணக் காரகம், கோளிக் காரகம், அவதிக் காரகம், ஆதாரக் காரகம் என ஆறு வகைப்படும் (எ-று.)

'தேமொழியே!' என்பது மகடூஉ முன்னிலை.

(1)

30. பாலும் சிறப்பும் சார்ந்து பெயர்ச்சொற்கள் இவ்வளவினவாம் என்பதும்,
முதல் வேற்றுமையின் உருபும்

ஒருவ னொருத்தியொன் றாஞ்சிறப் போடுபல் லோர்பலவைக்
கருது முறையிற் கலப்பன வேற்றுமை காண்முதல்சு
மருவும்அர் ஆர்அர்கள் ஆர்கள்கள் மார்முதல் வேற்றுமையின்
உருவம் விளிவேற் றுமையொழித் தெங்கு முறப்பெறுமே.

(இ-ள்.) ஒருவனைக் கருதின சொல்லும், ஒருத்தியைக் கருதின சொல்லும், பலரைக் கருதின சொல்லும், ஒன்றைக் கருதின சொல்லும், பலவைக் கருதின சொல்லும், ஒருவனைச் சிறப்பித்த சொல்லும், ஒருத்தியைச் சிறப்பித்த சொல்லும், ஒன்றைச் சிறப்பித்த சொல்லும் எனப் பெயர்ச்சொல்லெல்லாம் எட்டு வகைப்


1. இது சொல்லிலக்கணத்தைக் கூறும் அதிகாரம் என்றாம்.

2. இது வேற்றுமையைக் கூறும் படலம் என்றாம்.

3. கருத்தா - செய்பவன் (முதல் வேற்றுமை); கருமம் - செயப்படுபொருள் (இரண்டாம் வேற்றுமை); கரணம் - கருவி.