பக்கம் எண் :
 
68

மூன்று வகைப்படும். அவை தமிழ்த் தாதுவும், வடமொழித்தாதுவும், திசைச்சொற்றாதுவுமாம். தமிழ்த் தாதுக்கள் நட, அடு , செய், பண்ணு என்னும் இவை முதலாக வரும். வடமொழித் தாதுக்கள் வடவெழுத்தோடு கூடியும், வடசொற்சிதைவாயும் இருக்கும். வி என்னும் எழுத்தின் பின் வடவெழுத்தடைவிற் பத்தொன்பதாம் வரியின் மூன்றாம் எழுத்தையும், ந என்னும் எழுத்தின் பின் முப்பதாம் வரியின் மூன்றாம் எழுத்தையும், கிரு என்னும் எழுத்தின் பின் முப்பத்தொன்றாம் வரியின் மூன்றாம் எழுத்தையுங் கூட்டின பொழுது முன்னிலை ஏவலொருமை போலத் தோன்றித் தாதுவாதல் காண்க. சிந்தி, வந்தி எனப் பிறவும் வரும் வடவெழுத்துத் தாதுவெல்லாம் பெரும்பாலும் இகார இறுதியாய் அல்லது வாரா என்க. திசைச்சொல் தாதுக்கள் நொடி, கோடி என்னும் சொற்களொப்ப, முன்னிலையில் ஏவற்பொருண்மேல் ஒருமைச் சொல்லாய் வடமொழி தமிழ்ச் சொற்களினின்று வேறாய் வரும். பிறவுமன்ன.

(1)

61. சில தாதுக்கள்

நடவடு செய்பண்ணு நண்ணுபோ சிந்தி நவிலுண்ணிரு
கிடவிடு கூறு பெறுமறு கொள்ளழை வாழ்கிளைவெல்
கடநடு தங்கு கசிபொசி பூசு மிகுபுகுசெல்
இடுமுடி யேந்துகொல் இவ்வண்ண மற்று மியற்றிக்கொள்ளே.

முன்பிற்சூத்திரத்தில் தாதுக்களைப் பிறப்பித்துக்கொள்ளச் சொன்னானேயாயினும், அவற்றுட்சில காட்டிய வண்ணமே இயற்றிக்கொள்க என்றான்; ஈண்டு மேலும் சில தாதுக்கள் காட்டுகின்றான்.

(இ-ள்.) 'நட' என்பது முதல் 'கொல்' என்பது ஈறாக முப்பத்து மூன்று தாதுக்கள் கண்டு, பிறவும் இப்படியே தோற்றுவித்துக் கொள்க(எ-று.)

அவற்றுள் கருமத்தை நீங்காத தாது, கருமத்தை நீங்கின தாது எனத் தாது இருவகையாம். வடமொழிப் புலவரும் சகருமகம் அகருமகம் என வழங்குவர். கிரியா பதங்கள் முடிக்குமிடத்து முன் சொன்ன விகாரங்களை அறிந்து வேண்டுமிடமறிந்து முடிக்க.

(2)