பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்26முத்துவீரியம்

எகரம் தனித்து நின்றே ஈறாகும்

84. எகரம் புள்ளியோ டிணைந்தீ றாகா.

(இ-ள்.) எகரவுயிர் மெய்களோடு கூடியீறாகாவாம். (84)

ஒகரம் நகரத்தோடு ஈறாகும்

85. ஒகர நகரமெய் யோடிறு வாகும்.

(இ-ள்.) ஒகரவுயிர் நகரமெய்யோடீறாகும்.

(வ-று.) நொ. (85)

ஒள ககர வகரத்தோடு ஈறாகும்

86. ஒளகான் ககர வகரமோ டன்ன.

(இ-ள்.) ஒளகாரவுயிர் ககரவகரங்களோ டீறாகும்.

(வ-று.) கௌ, வௌ.

(வி-ரை.)

‘‘குற்றுயிர் அளபின் ஈறாம் எகரம்
மெய்யொடு ஏலாது ஒந்நவ் வொடாம் ஒள
ககர வகரமொ டாகும் என்ப’’ (எழுத் - 52)

என்ற நன்னூலின் கருத்தை 83 முதல் இந் நூற்பா வரையுள்ள நூற்பாக்களில் காணலாம். (86)

உகர ஊகாரம் நகரத்தோடு ஈறாகா

87. உ, ஊ, நகரமோ டுறாவென மொழிப.

(இ-ள்.) உகர ஊகார உயிர் நகரமெய்யோடு ஈறாகாவாம்.

(வி-ரை.) ‘இந்நூற்பா உ ஊகாரம் நவவொடு நவிலா’ என்ற தொல்காப்பிய நூற்பாவை
யுளங்கொண்டு கூறியதாகும். இதற்குரிய உரை பொருத்த மற்றதாகும். இதுபற்றி யான்
தொல்காப்பிய இளம் பூரண ருரையில் விளக்கி யுள்ளேன். அது வருமாறு:-

உ ஊ என்பன வொன்றுமே நகரத்தொடும் வ கரத்தொடும் வாரா எனப் பொருள்
கூறினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும்.

ஆனால் தொல்காப்பியரே ‘செலவினும் வரவினும் தரவினும்’ என்றும், ‘அளவும்
நிறையும்’ என்றும், ‘களவினுட் டவிர்ச்சி’ என்றும் நூற்பா செய்துள்ளமையானும், ‘புன்கண்
உடைத்தாற் புணர்வு’ (குறள்-52) எனச் சான்றோர் செய்யுளில் வருதலானும், இவர்கள்
கருத்து இந் நூற்பாவிற்குப் பொருந்துவதன்றாம்.