பக்கம் எண் :
 
சுவாமிநாதம்100
 

     சாத்தனுக்கு மகன் என்ற தொடரில் நான்காம் வேற்றுமை ஆறாம்
வேற்றுமைப் பொருள் தரும். இந்தத் தொடர், இலக்கண ஆசிரியர்கள்
கருத்துப்படி ஆறாம் வேற்றுமை ஏற்று வராததால் ஆறாம் வேற்றுமையே
சில இடங்களில் ‘அது’ என்றும் சில இடங்களில் ‘கு’ என்றும் வருவதால்
பிளவுபட்டதாகக் கருதலாம்.

     இயைபு உடைமை, இயைபு இலாமை என்ற கருத்து இலக்கண விளக்கம்
உரையில் (220 சூத் உரை. பக். 271) காணப்படுகின்றது. ’பொருண் மயக்கம்
தன் பொருளில் தீராது மயங்குதலின் உருபு ஏற்ற சொல்லும், உருபு நோக்கிய
சொல்லும் இயைபு உடையனவாம் ஆகலின் ........என்றும் உருபு மயக்கம்
தன்பொருளில் தீர்ந்து மயங்குதலின் உருபு ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய
சொல்லும் தம்முள் இயைபு உடையன அல்லவாம் ஆகலின்’........ என்றும்
இலக்கண விளக்க உரையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

     யானையைக் கோட்டின் கண் குறைத்தான்.
     யானையது கோட்டைக் குறைத்தான்.

     முதல், சினை என்பது பேசுவோர் குறிப்பை ஒட்டியது என்பதால்
முதல், சினை என்பன ஒப்புநிலைச் (Relative terms) சொற்கள் என்பதும்
தனி நிலைச் (Absolute terms) சொற்கள் அல்ல என்பதும் அறியத்தக்கன.
கை என்பதை மனித உடல் முழுமையும் நோக்கச் சினையாகவும் விரலை
நோக்க  முதலாகவும் கருத வேண்டும்.

     பல பொருள் சேர்ந்த ஒன்றைக் குறிப்பிடும் பிண்டம் என்பதையும்
முதலாகவும் சினையாகவும் கருதலாம். இச்சூத்திரம் இலக்கண விளக்கம் 216,
221, 222 ஆகிய சூத்திரங்களைத் தழுவியது.

     பா. வி. : தந்நு என்று கையெழுத்துப் பிரதியில் காணப்படுகின்றது. த,
ந, நு, என்று திருத்தப்பட்டுள்ளது.