பொருள், யாப்பு, அலங்காரம் என்ற ஐந்து இலக்கண விரிவை ஒவ்வொரு அதிகாரத்தையும் மூன்று மூன்று இயலாகச் சுருக்கிச் சுவாமிநாதம் என்ற பெயரால் கூறுவேன். 14. | பெயர்,எண்,முறை, பிறப்பு,வடிவு, அளவு,முத னிலையே பின்னிலையே, இடைநிலை,போ லியதாம்பத் துடனே முயல்பதமும் புணர்வும்உறப் பன்னிரண்டாய்; அருளான் மொழிக்குக்கா ரணமாகி நாதகா ரியப்பட் டயீரொலிஓர்ந்து எழுதில்எழுத் தாம்;அவற்றுள் உயிர், மெய் யறுகுறுக்க(ம்), மூவினங்கள், குறில், நெடிற்,சுட் டு,வினா இயல்உயிர்மெய், ஆய்த(ம்), முதல் சார்புபோ லியினொடு இரண்டளபாம் இருபதிரண் டெழுத்தின் போகமே. (2) | எழுத்துக்களை ஆராயும் முறையும் எழுத்துக்குரிய பொது விளக்கமும் எழுத்துக்களின் பெயர்களும் கூறுகின்றது இச் சூத்திரம். உரை : 1. பெயர் 2. எண் 3. முறை 4. பிறப்பு 5. வரிவடிவு 6. மாத்திரை 7. மொழிமுதல் எழுத்துக்கள் 8. மொழி இறுதி எழுத்துக்கள் 9. மொழிக்கு இடைவரும் மெய்ம் மயக்கங்கள் 10. போலி ஆகிய பத்து முறையோடு. 11. பதம் 12. புணர்ச்சி ஆகிய இரண்டும் சேரப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து எழுத்தை ஆராயலாம். மொழிக்கு முதற்காரணமாகியும் நாதத்தினது காரியமாகியும் வரும் ஒலியை எழுதுவதால் எழுத்து எனப்படும். 1. உயிர் 2. மெய், அறுவகைக் குறுக்கங்களான 3. ஐகாரக்குறுக்கம் 4. ஒளகாரக் குறுக்கம் 5. ஆய்தக் குறுக்கம் 6. மகரக் குறுக்கம் 7. குற்றியலிகரம் 8. குற்றியலுகரம் ஆகியவை, மூன்று இனமான 9. வல்லினம் 10. மெல்லினம் 11. இடையினம் ஆகியவை, 12. குறில் 13. நெடில் 14. சுட்டு 15. வினா 16. உயிர்மெய் 17. ஆய்தம் 18. முதல் எழுத்துக்கள் 19. சார்பு எழுத்துக்கள் 20. போலி எழுத்துக்கள்; இரண்டு அளபெடையான 21. உயிரளபெடை 22. ஒற்றளபெடை ஆக மொத்தம் இருபத்திரண்டும் எழுத்தின் பெயராகும். |