பக்கம் எண் :
 
சுவாமிநாதம்21எழுத்ததிகாரம்
 

இடையும் வரும் ஐகாரம் குறுவது ஐகாரக்குறுக்கம். மொழி முதலில் வரும்
ஒளகாரம் குறுகுவது ஒளகாரக்குறுக்கம். லகர ளகர ஈற்றுச்சொல் வல்லெழுத்து
முதன்மொழியொடு புணரும் போது திரியும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம்
எனப்படும். லகர ளகரத் திரிந்து முறையே னகர ணகரத்தின் முன் வரும்
மகரமும் வகரத்தின் பின்வரும் மகரமும் குறுகி மகரக்குறுக்கம் ஆகும்.
குற்றெழுத்தின் கீழும் உயிரெழுத்தைத் தொடர்ந்த வல்லினத்தின் மேலும்
அங்காந்து கூறும் முயற்சியால் நெஞ்சொலி கொண்டு மெய்போலத் தோன்றும்
ஆய்தம்.

     வடக்கு - வன்றொடர்க் குற்றியலுகரம்
     தெங்கு  - மென்றொடர்க் குற்றியலுகரம்
     செய்கு  - இடைத்தொடர்க் குற்றியலுகரம்
     வரகு   - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
     அஃகு  - ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

     விளக்கம் : குற்றியலுகரம் என்பது மொழியின் இறுதியிலுள்ள உகரம்
ஏனைய உகரம் போல இதழ்குவித்துக் கூறப்படாமல் இதழ்குவியாமல்
கூறப்படுவதால்தான் குற்றியலுகரம் என்று பெயர்பெற்றது. இதனை இதழ்
குவியா ஒலி (Unrounded) என்று ஒலியியலார் கூறுவர்.

     குற்றியலிகரம் என்பதை இகரத்தின் மாற்றொலியாகக் கருதலாம்.

     ஐகாரக் குறுக்கத்திற்குத் தொல்காப்பியமும் (57) அதையொட்டி
நன்னூலும் (99) இலக்கண விளக்கமும் (24) ஒரு மாத்திரை என்று
குறிப்பிட்டுள்ளன. இது ஐகாரம் அகரமாக ஒலித்தலைக் குறிக்கும்.
ஐகாரக்குறுக்கம் பெரும்பான்மையும் யகரத்தின் மேலும் (இடையன்-இடயன்)
மற்றொரு ஐகாரத்தின் மேலும் வரும் (தலைமை-தலமை).