வேற்றுமை அணி. பொருள், குணம் போன்ற ஒன்றோடு பொருந்தும் மற்றொரு உண்மையான பொருளை வைத்து எல்லோரும் அறிந்து கொள்ளும் முறையில் சொல்லுவது வேற்றுப்பொருள் வைப்புஅணி. அது 1. கூட்டம் (பொருந்துவதனைப் பொருத்தம் உடையதாகச் சொல்லுதல், 2. கூடாமை (பொருந்தாததைப் பொருந்தும்படி அமைத்துக் கூறல்), 3. இருமை (பொருந்துவதையும் பொருந்தாததையும் சேர்த்துக் கூறுதல்), 4. விபரிதம் (மாற்றி விபரிதமாகத் தோன்றும் முறையில் கூறுதல், 5. முரண் (தம்முள் மாறுபட்டிருக்கும் இயல்பு உடைய பொருளை வைத்தல்), 6. ஓர்வழி (ஒரு பண்பைக் கூறினால் அப்பண்பின் எல்லாக் கூறுகளையும் முழுமையாகச் செல்லாது சிலவற்றின் மேல் செல்வது) 7. ஒருதிறம் உரைத்தால் (அத்திறம் எல்லாவற்றின் மேலும் முற்றச் செல்ல உரைப்பது) ஆகிய ஏழு வகைப்படும். அசையும் பொருள் அசையாப் பொருள் ஆகியவற்றின் இயல்பானத் தன்மையைத் தான் கருதிய பொருட்குறிப்புத் தோன்றும்படி அப்பொருள்கள் மேல் ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்ற அணி. ஒரு பொருளால் நிகழும் நிகழ்ச்சியின் பயனை அதன் தீமையும் நன்மையும் வெளிப்பட்டுத் தோன்றுமாறு கூறுதல் நிதரிசன அணி எனப்படும். விளக்கம் : இது தண்டியலங்காரம் 49, 47, 48, 56, 85 ஆகிய சூத்திரங்களைத் தழுவியது. தண்டியலங்காரம் (48-ஆம் நூற்பா) வேற்றுமைப் பொருள் அணியை முழுவதும் சேறல் (முழுமை) ஒருவழிச் சேறல் (ஓர்வழி) முரணித் தோற்றல் (முரண்), சிலேடையின் முடித்தல், கூடா இயற்கை (கூடாமை) கூடும் இயற்கை (கூட்டம்), இருமை இயற்கை (இருமை), விபரீதப் படுத்தல் (விபரிதம்) என்று எட்டு வகையாகக் கூறியுள்ளது. சிலேடையின் முடித்தலும் இருமையின் பகுதியாகக் கருதியே சாமி கவிராயர் ஏழு வகையாகக் கூறியிருக்க வேண்டும். |